முதல் வீரன்.. ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை.. ஆர்சிபியோட சொத்துங்க இவரு..

2024 ஐபிஎல் சீசன், பேட்ஸ்மேன்களுக்கான பொற்காலம் எனப்படும் சூழலில் தான் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து பல வீரர்கள் அதிக ரன்களை குவித்து சாதனைகளையும் படைத்து வருகின்றனர். இந்த சீசனில் கூட இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா, அசுதோஷ் ஷர்மா, சஷாங்க் சிங், சாய் சுதர்சன், ரியான் பராக் என பலரும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எப்படிப்பட்ட பந்து வீச்சாளராக இருந்தாலும், கடினமான பந்துகள் வந்தாலும் அதை எல்லாம் அசால்டாக டீல் செய்து பலரும் ரன் குவித்து வருவதால் இந்த சீசனில் யார் அதிக ரன் குவிப்பார்கள் என்பதில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிகிறது.

ஆனால், அதே வேளையில் இப்படி பல இளம் வீரர்கள் நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் கலக்கிக் கொண்டே இருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் எட்ட முடியாத இடத்தில் இருந்து வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. ஆர்சிபி தற்போது 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தாலும் ஆரம்பத்தில் அவர்களின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

ஆனால், அப்படி பெங்களூரு அணி சுக்கு நூறாக உடைந்த சமயத்தில் கூட பல போட்டிகளில் அசத்தலாக ஆடி ரன் சேர்த்திருந்த கோலி, இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 542 ரன்களை சேர்த்துள்ளார். அது மட்டுமில்லாமல், இதில் 4 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். சர்வதேச அணியில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களுக்கு நடுவே, தனி ராஜ்ஜியம் ஒன்றையே தனது பேட்டிங் மூலம் நடத்தி வருகிறார் விராட் கோலி.

டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன்கள் பலர், ஐபிஎல் சீசனில் நல்ல ஃபார்மில் இல்லாமல் இருக்கும் போது கோலியின் பேட்டிங் திறன் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் தெரிகிறது. இதனிடையே, சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 14 வது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து அசத்தி இருந்தது ஆர்சிபி அணி.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 6 ஓவர்களில் 90 ரன்களையும் அவர்கள் கடந்திருந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 42 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இந்த நிலையில், முதல் ஆளாக ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

தனது அணி வெற்றி பெற்ற போட்டியில், 4,000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பு தான் அது. மொத்தம் 4039 ரன்களை தனது அணி வெற்றி பெற்ற போது எடுத்துள்ள கோலிக்கு அடுத்தபடியாக, தவான் 3945 ரன்களும், ரோஹித் ஷர்மா 3918 ரன்களும் தங்களின் அணி வெற்றி பெறும் போது எடுத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...