தோனியை முந்தி சிஎஸ்கே வரலாற்றிலேயே ஜடேஜா படைத்த அற்புதமான சாதனை..

புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் முன்னேறி இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, பஞ்சாப்பிற்கு எதிரான வெற்றி, மிகப்பெரிய ஒரு உத்வேகத்தையும், மாற்றத்தையும் கொடுத்துள்ளது. நல்ல தொடக்கத்தை இந்த சீசனில் கொடுத்திருந்த சிஎஸ்கே அணி கடைசியில் ஆடிய சில போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர் தோல்விகளை சந்திக்கவும் நேரிட்டிருந்தது. ஆனால் அதிலிருந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டு வந்துள்ள சிஎஸ்கே அணி இன்னும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளை குவித்தால் மிக எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம்.

சிஎஸ்கேவின் ஆட்டம் தற்போது மிகச் சிறப்பாக இருந்தாலும் அதில் சில பிழைகள் இல்லாமல் இருக்கவில்லை. சிஎஸ்கேவின் தொடக்க ஜோடி பெரும்பாலான போட்டிகளில் பவர் பிளே தாண்டி பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பதே அரிதாக உள்ளது.

இதனால் அவர்கள் குறைவான ரன்களையே 20 ஓவர்கள் முடிவிலும் அடிப்பதுடன் மட்டுமில்லாமல், பேட்டிங் லைன் அப்பும் பெரிய ஏமாற்றத்தை தான் சந்தித்து வருகிறது. கடைசி கட்ட ஓவர்களில் இறங்கி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து வந்த தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் பெரிய அளவில் ரன் குவிக்காமல் அவுட்டாகி இருந்தார்.

இன்னொரு பக்கம் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே, உலகக் கோப்பை அணியில் தேர்வான பின்னால் ஆடியிருந்த 2 போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். இப்படி சிஎஸ்கே பேட்டிங் லைனில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும் நிலையில் தான் அவற்றையும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதனிடையே சென்னை அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி இருந்த ரவீந்திர ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதையும் பஞ்சாப் அணிக்கு எதிராக வென்றிருந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக தேவைப்படும் போதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பும் ரவீந்திர ஜடேஜா, மீண்டும் ஒருமுறை அதனை தனது அணிக்காகவும் செய்து காட்டியுள்ளார்.

அப்படி இருக்கையில் தான் சிஎஸ்கே வீரராக தோனியை மிஞ்சி ஒரு முக்கியமான சாதனை படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தில் இருந்து வந்தனர் (15 முறை). இதனை தற்போது முறியடித்துள்ள ஜடேஜா, தனியாளாக முதலிடத்திற்கு முன்னேறி 16 முறை ஐபிஎல் ஆட்ட நாயகன் விருதையும் ஐபிஎல் தொடரில் வென்று அசத்தி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...