படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?

இன்று ஒரு படத்தில் நடித்து விட்டு, அந்தப் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் அந்த காலத்து சூப்பர் ஸ்டார்கள் சம்பளம் வாங்காமலும், குறைந்த சம்பளம் வாங்கியும் பல படங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர். இவற்றில் எம்.கே.தியாகராஜபாகவதர், கே.பி. சுந்தராம்பாள் அந்தக் காலத்திலேயே அதிக சம்பளமாக ஒரு லட்சம் வரை பெற்றனர்.

இவற்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சற்று வித்தயாசமானவர். தயாரிப்பாளர்களின் நிலைகண்டு படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாகி சம்பளத்தினையும் அட்ஜெட் செய்து வாங்குவார். இவரைப் போலத்தான் ஜெய்சங்கர், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரும். ஆனால் ஒரு படத்திற்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்று நடித்துள்ளார். அந்தப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த படம் இது. இப்படத்தின் இயக்குநரான பி.ஆர். பந்தலு ஆயிரத்தில் ஒருவன் கதையை ஏற்கனவே எழுதி அதை வேறொரு நடிகரை வைத்து இயக்கப் போவதாகத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியும், பி.ஆர்.பந்தலுவும் சந்தித்த போது ஆயிரத்தில் ஒருவன் படத்தினைப் பற்றிக் கூறியிருக்கிறார் பந்தலு.

ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!

உடனே வீனஸ் கிருஷ்ணமூர்த்தி இந்தக் கதை எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டியது. அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும். மேலும் படமும் நல்ல வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். அதே நேரம் பி.ஆர்.பந்தலுவுக்கு எம்.ஜி.ஆர் என் படத்தில் நடிப்பாரா என்று தயங்கியபடி கேட்க நான் எம்.ஜி.ஆரிடம் பேசுகிறேன் என்று வீனஸ் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்து சொன்னமாதிரியே அவரிடம் கதை சொல்ல சம்மதம் வாங்கியிருக்கிறார்.

பின்னர் அன்னை சத்யா இல்லத்தில் எம்.ஜி.ஆரும், பி.ஆர். பந்தலுவும் சந்தித்துக் கொண்டனர். கதையைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.  பின் மகிழ்ச்சியடைந்த பந்தலு சம்பள விஷயங்களைப் பற்றி பேச, எம்.ஜி.ஆர் எனக்கு ஒரு ரூபாய் போதும் என்றிருக்கிறார்.

பந்தலுவோ ஒரு ரூபாய் என்றால் ஒரு லட்சம் என்று ரூபாய் நோட்டுக்களை எடுக்க எம்.ஜி.ஆர் நான் சொன்னது வெறும் ஒரு ரூபாய் நாணயம் மட்டும் போதும் என்று கூற அதிர்ச்சியானார் பந்தலு. எவ்வளவோ கூறியும் மறுத்துவிட்ட எம்.ஜி.ஆர் ஒருரூபாயை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். படம் முழுக்க கோவாவில் 35 நாட்கள்  ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

பின்பு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற பி.ஆர்.பந்தலு எம்.ஜி.ஆரைச் சந்தித்து நன்றி சொல்லிவிட்டு அவருக்கு அப்போதைய சம்பள மதிப்பு எவ்வளவோ அதனை விடாப்பிடியாக வைத்துச் சென்றிருக்கிறார். புராணப் படங்கள், பிரம்மாண்ட தயாரிப்பு என சினிமாவை அசர வைத்த பி.ஆர்.பந்தலுவை தனது எளிமையால் அசர வைத்து கர்ணன் எடுத்த இயக்குநருக்கே தான் கர்ணன் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் மக்கள் திலகம்.

Published by
John

Recent Posts