மறந்தும் சிவராத்திரியன்று இவற்றையெல்லாம் செய்துடாதீங்க!!


சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என இரு பொருள் உண்டு. அதனால்தான், சிவராத்திரிக்கு ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என  பொருள் கொள்ளப்படுகிறது. இங்கு இன்பம் என்ற சொல்லுக்கு உடல் சுகம், பொருட்களினால் வரும் சுகம் என அற்பமான பொருட்களினால் வரும் சிற்றின்பம் அல்ல. நல்வாழ்வு, பேர், புகழ் என இம்மைக்கும் மறுமைக்கும் பெற வைக்கும் பேரின்பத்தை குறிக்கும்.


பேரின்பத்தை தரும் இந்த சிவராத்திரியன்று விரதம் இருந்து, என்னவெல்லாம் செய்யவேண்டும் என முன்சென்ற சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம். ஆனா, என்னவெல்லாம் செய்யக்கூடாது என இந்த பதிவுகளில் பார்க்கலாம்..

மனிதனுக்கு மிக முக்கியமானது உடை, உணவு ஆகும், அந்த இரண்டையும் தவிர்த்து இறைவனையே நினைத்து மனமுருகி வேண்டி நிற்க வேண்டும். உணவை தவிர்க்க முடியாதவர்கள் ஒருவேளை சைவ உணவை உட்கொள்ளலாம். உணவு, உறக்கத்தை தவிர்த்தால் புலன்கள் தானாகவே அடங்கும். சிவப்பெருமானுக்கு ஆரவாரம் அறவே பிடிக்காது. அதனால், கண் விழிக்க வேண்டி சினிமா பார்த்தல் கூடாது, அலைப்பேசி, தொலைக்காட்சியில் மனம் லயித்தல் கூடாது. ஆன்மீகம் தவிர்த்து, அரசியல், கதை புத்தகம் படிக்கக்கூடாது. பொய் சொல்லுதல், ஊழலில் ஈடுபடுதல் மாதிரியான விசயத்திலும் ஈடுபடக்கூடாது. உடலுறவில் ஈடுபடக்கூடாது. முக்கியமாய் கோவிலில் உட்கார்ந்து அரட்டை அடித்தல் கூடாது. கோவிலில் சொல்லப்படும் சிவன் சம்பந்தமான கதைகளை உன்னிப்பாய் கேட்கவேண்டும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள் அமைதியான இடத்தில் அமர்ந்து சிவ நாமத்தை சொல்ல வேண்டும்.

இப்படியெல்லாம் செய்யாமல் இறை சிந்தனையோடு மனதை அலைப்பாய வைக்காமல் விரதம் அனுஷ்டிப்போருக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

ஓம் நமச்சிவாய!!

Published by
Staff

Recent Posts