இசை மாயாஜாலங்களை நிகழ்த்திய இரட்டை இசையமைப்பாளர்கள்- மனோஜ் கியான்

எண்பதுகளில் இளையராஜாவின் இசைதான் பட்டி தொட்டி எங்கும் பரவி கிடந்தது. டீக்கடைகளிலும் பாமரத்தனமான இடங்கள் எங்கும் இளையராஜாவின் இசைதான் ஒலித்தது.


இந்த நேரத்தில் இன்னும் சில இசையமைப்பாளர்களும் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தனர். சில வருடங்கள் தங்கள் இசை சாம்ராஜ்யத்தை தமிழ் திரையுலகில் நிகழ்த்தினாலும் கால்பந்தில் கோல் அடிப்பது போல கிரிக்கெட்டில் பந்தை சிக்சுக்கு தூக்குவது போல இவர்களும் தங்கள் இசை சாம்ராஜ்யத்தை நிகழ்த்தினர். அவற்றில் முக்கியமான இரட்டை இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான். இவர்கள் இரட்டை இசையமைப்பாளர்கள் ஆவர்.

ஹிந்தியில் ரூஹி என்ற படம் மூலம் அறிமுகமாகி இருந்தனர். இவர்கள் திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஊமை விழிகள் படத்தில்தான் அறிமுகமாகி இருந்தனர்.

இப்படத்தில் பாடல்கள் எல்லாமே ஹிட் மாமரத்து பூவெடுத்து என்ற டூயட் பாடல் மிகப்பெரும் ஹிட். மேலும் ராத்திரி நேரத்து பூஜையில், பிரபல பழம்பெரும் பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய தோல்வி நிலை என நினைத்தால் பாடல் என எல்லாமே நன்றாக இருந்தது.

ஊமை விழிகள் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஒரு கடற்கரைக்கு சுற்றுலா செல்லுபவர்களை ஒருவன் கொல்வதுதான் கதை.

டெரரான வில்லனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இப்படத்தின் கதை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் கதை என்பதை உணர்ந்து மிக சிறப்பாக இசையமைத்து இருந்தனர் இந்த இரட்டையர்கள்.

பின்பு இவர்கள் திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்கும் படங்களின் செல்லப்பிள்ளை ஆனார்கள்.

குறிப்பாக முதல் படத்தை தயாரித்தவர் ஆபாவாணன். அவரின் செல்லப்பிள்ளையானார்கள் இந்த இசையமைப்பாளர்கள்.

குறிப்பாக இந்த கூட்டணிகளின் உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வெற்றி முரசு கொட்டிய பல பாடல்களை கொடுத்தனர்.

இதில் இணைந்த கைகளுக்கு இசையமைத்தபோது மனோஜோடு பிரிந்து கியான் மட்டும் கியான் வர்மா என இசையமைத்திருந்தார். இதில் எல்லா பாடல்களுமே ஹிட்டோ ஹிட். குறிப்பாக அந்தி நேர தென்றல் காற்று என்ற பாடல் மெகா ஹிட்.

இவர்கள் கூட்டணி மட்டும் அல்லாது மற்றவர்களின் படங்களான வெளிச்சம், உரிமை கீதம்,மேகம் கருத்திருக்கு உள்ளிட்ட பல படங்களில் ஒரு இசை வேள்வியையே நடத்தினர்

இதில் வெளிச்சம் படத்தில் இடம்பெற்ற துள்ளி துள்ளி போகும் பெண்ணே,மேகம் கருத்திருக்கு படத்தில் இடம்பெற்ற அழகான புள்ளி மானே உள்ளிட்ட பாடல்கள் காலங்கள் கடந்தும் இன்றளவும் பலரும் ரசிக்கும் பாடல்களாகும்.

இயக்குனர் ஆர்வி உதயக்குமார் முதன் முதலில் இயக்கிய படம் உரிமை கீதம் படம். இதில் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் , பொன்மானே நில்லடி ஹ ஹா போன்ற பாடல்கள் மிக புகழ்பெற்றது.

இந்த படத்துக்கும் மனோஜ் கியான் தான் இசை.

இப்படி பல படங்களில் பல மியூசிக்கல் ஹிட் கொடுத்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. கியான் வர்மா என்று தனியாக இசையமைத்த கியான் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார்.

மனோஜ் மட்டும் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில் என்றென்றும் காதல், குட்லக் உள்ளிட்ட படங்களை இயக்கி இசையமைக்கவும் செய்தார். பாடல்கள் மட்டும் வழக்கம்போல் ஹிட் ஆகின.

படம் போதிய அளவு வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமா இருக்கும் வரை இவர்களின் பாடல்கள் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்களின் பாடல்களை எண்பதுகளில் ரசித்து கேட்டவர்களுக்கு இவர்களின் மகத்துவம் புரியும்.

Published by
Staff

Recent Posts