ஆன்மீகம்

உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?

இன்றும் கோவில்களில் எந்த ஒரு விழா என்றாலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் இது தான். பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்எஸ். பாடிய சூப்பர்ஹிட் பக்திப்பாடல் உள்ளம் உருகுதய்யா… இந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.

அந்த அளவு தனது காந்தக்குரலால் இந்தப் பாடலைப் பாடி அசத்தியிருப்பார் டிஎம்.எஸ். பக்தகோடிகளை மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஆனால் இந்தப் பாடலில் ஒரு விசேஷம் உண்டு. அது என்னவென்றால் இந்தப் பாடலைப் பாடியவர் யார் என்று டிஎம்எஸ்சுக்கே தெரியாதாம்.

பல்லாண்டுகளுக்கு முன் டிஎம்எஸ். பழனி சென்றாராம். அங்கு வழக்கமாகத் தங்கும் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அங்கு வேலை செய்து வந்த ஒரு பையன் அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்த படி இருந்தான். அவன் என்ன பாடுகிறான் என்று தற்செயலாகக் கவனித்தாராம் டிஎம்எஸ்.

ஆனால் அவன் பாடப் பாட பாடலின் சொல்லிலும், அதன் பொருளிலும் சொக்கி விட்டாராம். அதை விட ஆச்சரியப்பட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது ஒரு இஸ்லாமிய சிறுவனாம். இவன் எப்படி இவ்வளவு பயபக்தியுடன் ஒரு முருகன் பாடலைப் பாடுகிறான் என்று ஆச்சரியம் மேலோங்கியது. அந்த சிறுவனை அழைத்துள்ளார். பாடலை எழுதியது யாரப்பா என்று கேட்டாராம்.

Lord Muruga

அதற்கு அவன் தெரியாது என்று பதில் சொல்லி விட்டான். பரவாயில்லை. முழுப்பாடலையும் பாடு என்று கேட்டு, அதன் வரிகளை எழுதிக்கொண்டாராம். பழனியில் இருந்து சென்னை வந்து இறங்கியதும் அந்தப் பாடலில் உள்ளம் உருகுதடா என்ற வரிகளில் அடா என்ற இடத்தில் மட்டும் அய்யா என்று மாற்றி, பாடல் முழுவதையும் பாடிப் பதிவு செய்தாராம். அதன் பின் கச்சேரிக்குப் போகும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடலையேப் பாடி அசத்தியுள்ளார்.

மேடையில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்ற விஷயத்தையும் சொல்வாராம். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றாராம் டிஎம்எஸ். அங்கு கோவிலைச் சுற்றி வந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்சி அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அங்கு ஒரு கல்வெட்டில் உள்ளம் உருகுதடா பாடல் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் ஆண்டவன் பிச்சி.

யாரப்பா இந்த ஆண்டவன் பிச்சி என டிஎம்எஸ் ஆர்வமுடன் தேடியுள்ளார். 9 குழந்தைகளுக்குத் தாயான மரகதம். வாழ்வில் எல்லா சோதகனைகளையும் கடந்து கடைசியில் துறவறம் வந்து இறைவனடி சேர்ந்தவர்.

இவர் இறப்பதற்கு முன்பாக கோயில் கோயிலாகச் சென்று பாடுவாராம். அப்படி காஞ்சி மடத்தில் ஒருமுறை பாடிக்கொண்டு இருக்க, இவரைப் பார்த்து பிச்சைக்காரி என துரத்தினார்களாம். காஞ்சி மகா பெரியவரோ அவரை அழைத்து பிரசாதம் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இன்று முதல் உன் பெயர் ஆண்டவன் பிச்சி என்று ஆசிர்வதித்து அனுப்பினாராம். அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று பக்திப் பாடல்களைப் பாடி அசத்தினார் மரகதவல்லி.

ஆனால் இதில் ஒரு அற்புதம் என்னவென்;றால் இந்தப் பாடல் பழனி விடுதியில் உள்ள முஸ்லிம் சிறுவனுக்கு எப்படி போய்ச் சேர்ந்தது என்பது தான். அதுதான் ஆண்டவனின் அற்புதம்.

Published by
Sankar

Recent Posts