அஜித்தை தல என அழைத்த மகாநதி சங்கர்.. அந்த ஒரு வாய்ப்புக்காக 20 வருஷம் மனதில் இருந்த ஏக்கம்..

பொதுவாக தமிழ் சினிமாவில் பலரும் தாங்கள் பிரபலமாகும் அல்லது அறிமுகமாகும் படத்தின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள். அவர்கள் பெயரே மறந்து அந்த படத்தின் பெயருடன் ரசிகர்கள் அனைவரின் மனம் பதியும் அளவுக்கும் தாக்கம் உண்டு பண்ணும். அந்த வகையில் ஜெயம் ரவி, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் என பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் பிரபலமான நடிகர் தான் மகாநதி சங்கர். கமல்ஹாசன் நடித்த ’மகாநதி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சங்கர், தனது பெயரை ’மகாநதி’ சங்கர் என்று மாற்றிக் கொண்டார். இவர் திரைப்படத்துறையில் நடிப்பதற்கு முன்னர் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் பணிபுரிந்தவர்.

தமிழ் திரை உலகில் நடிகர், தொலைக்காட்சி நடிகர், ஸ்டண்ட் கலைஞர் என புகழ்பெற்ற மகாநதி சங்கர் பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் கலக்கி உள்ளார். அத்துடன் கமல்ஹாசன், ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்துடன் அவர் தீனா திரைப்படத்தின் நடித்த போது தல என்று கூறியதால் அஜித்துக்கு தற்போது வரை அந்த பட்டம் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

மகாநதி சங்கர் முதலில் பாக்யராஜின் அம்மா வந்தாச்சு என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு அவர் கமல்ஹாசனின் சிங்காரவேலன் படத்தில் நடித்தாலும் ’மகாநதி’ படம் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இதனையடுத்து சரத்குமார் நடித்த நம்ம அண்ணாச்சி, அஜித் நடித்த ஆசை, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா,  சரத்குமார் நடித்த ரகசிய போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தார்.

இந்தியன் படத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில், சேனாதிபதி, பாசமுள்ள பாண்டியரே, ரட்சகன் போன்ற படங்களிலும் நடித்து கலக்கினார். கிட்டத்தட்ட நூறு படங்கள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த ’மகாநதி’ சங்கர், தீனா படத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தான் அஜித் படத்தில் நடித்தார். அந்த படம் தான் கடந்த ஆண்டு வெளியான ’துணிவு’ திரைப்படம்.

திரைப்படங்கள் மட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த அவர், மாயா சீரியலில் பசுபதி என்ற கேரக்டரிலும், நந்தினி சீரியலில் சத்திய நாராயணன் என்ற கேரக்டரிலும் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’வானத்தைப்போல’ சீரியலில் சங்கர பாண்டி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் மகாநதி சங்கர்.

ஒரு கட்டத்தில் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென காமெடி வேடத்தை நோக்கியும் மாறினார். ஓகே ஓகே என பல படங்களில் மகாநதி சங்கரின் காமெடி அமர்க்களமாக இருந்தது. சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் கூட மகாநதி சங்கர்  போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.