ஆன்மீகம்

பாவங்களை விலக்கி புண்ணியத்தை சேர்க்க நாளை வருகிறது மாசி மகம்…! இதைச் செய்ய மறவாதீர்…!

மாசி மாதம் என்றாலே எல்லா கோவில்களிலும் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு. அதிலும் குறிப்பாக மாசி மகம் ரொம்பவே முக்கியமான நாள்.

Maasi magam

கபாலீஸ்வரத்தில் எழுந்தருளக்கூடிய எம்பெருமான் கடலாடக்கூடிய நிகழ்வு மாசி மாதத்தில் நடைபெறும். எம்பெருமானின் அற்புதக் காட்சிகளைக் கோவில்களிலும், திருத்தேரில் உலா வரும்போதும் பார்க்கிறோம். அது போல நதித்துறைகளிலும் எழுந்தருள்கிறார் என்ற அற்புதமான விஷயத்தைத் தான் மாசி மாதம் முழுவதும் நாம் பார்க்கிறோம்.

சைவ, வைணவ பேதமில்லாமல் எல்லாக் கோவில்களிலும் கடலாடும் உற்சவம் நடைபெறும். இந்த அற்புதமான நாள் நாளை (6.3.2023) திங்கள்கிழமை வருகிறது.

வருண பகவானுக்கு சிவபெருமான் இந்த நாளில் ஒரு வரம் கொடுக்கிறார். உன்னில் யாரெல்லாம் இந்த நாளில் நீராடுகிறார்களோ அவர்களுக்குப் பாவங்களை நீக்கிப் புண்ணியத்தைத் தர வேண்டும்.

நவநதிகளும் இந்த வரத்தைப் பெற்று மகாமக குளத்தில் பாவங்களைப் போக்கிக் கொண்ட நாள். அது மட்டுமல்ல எந்த நீர் நிலைகளில் குளித்தாலும் பாவங்கள் விலகும் என்ற வரம் வருண பகவானுக்குத் தரப்பட்டது. இதை நாம் பெறும் அற்புதமான நாள் தான் இந்த மாசி மகம்.

masi magam 2

இந்த நாளில் நாம் விரதமிருந்து இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகும். குழந்தைகளுக்காகக் காத்திருப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து இந்த நாளில் விரதம் இருக்கலாம்.

காலையில் இருந்து முழுவதுமாக உபவாசம் இருந்து விரதத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும். வராகமூர்த்தியை நினைத்து விரதம் இருந்தாலும் பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

வராக மூர்த்தி இந்த நாளில் தான் பூமாதேவியை வெளிக்கொணர்ந்தார். அம்பாளுக்கும் தனி சிறப்பு உண்டு. தட்சனின் மகளாக தாட்சாயிணி என அம்பாள் அவதரித்த நாளும் இதுவே. சிவபெருமான் காமனை எரித்த நாளும் இதுதான்.

7ம் தேதி ஹோலி என்ற பண்டிகை வருகிறது. இது காமதேவன் பண்டிகை. காமனை எரித்த பண்டிகை. மாசி மகத்து அன்று பௌர்ணமியும் இருப்பதால் சத்யநாராயண பூஜையும் வருகிறது. முன்னோர்களின் வழிபாடும் இந்த நதிக்கரைகளில் செய்கிறபோது அதிவிசேஷமான பலனைப் பெற்றுத் தரும்.

Thalikayiru

இந்த நாளில் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளலாம். 6ம் தேதி காலை 6 மணி முதல் 7.20 வரை, 9.15 மணி முதல் 10.20 வரை தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். விரதமிருந்து வழிபடுகிறவர்கள் அன்று இரவு 7.30 முதல் 8.30 வரை பூஜை செய்து வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த மகத்தான நாளில் எந்தக் கோவிலிலாவது தெப்போற்சவம் நடந்தால் அங்கு போய் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம்.

இந்த நாளில் நதி மற்றும் நீர் நிலைகளில் புண்ணிய நதியான கங்கை கலந்திருப்பதாக ஐதீகம் உண்டு. அதனால் அன்றைய தினம் நாம் ஆறு, ஏரி, நதி, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளித்தால் கங்கை நதியில் குளித்ததற்குச் சமம் என்று கருதப்படுகிறது.

 

 

Published by
Sankar

Recent Posts