சிறப்பு கட்டுரைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூர் அரண்மனை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காண்போமா…?

மைசூர் அரண்மனை கர்நாடகா மாநிலம் மைசூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அற்புதமானதும், மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றும் ஆகும். இதற்கு ‘அம்பா விலாஸ்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. 1399 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை மைசூரை ஆண்டவர்கள் உடையார் வம்சத்தினர். இவர்களின் வசிப்பிடமாக மைசூர் அரண்மனை இருந்துள்ளது.

இந்த அரண்மனையின் அடித்தளம் 14 ஆம் நூற்றாண்டில் மைசூர் அரச குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது. மைசூர் ராஜ்ஜியத்தின் முதல் ஆட்சியாளரான யதுராய உடையார் தான் பழைய அரண்மனையை கட்டியதாக நம்பப்படுகிறது. தற்போதைய அரண்மனைக்கு முன்னோடியாக இருந்த பழைய அரண்மனை ஆறு நூற்றாண்டுகளாக பல முறை இடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

மைசூர் அரண்மனையின் கட்டிடக்கலையை பார்க்கும் போது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் பேரழகாக இருக்கும். நான்காம் கிருஷ்ணராஜ உடையார் அவர்களால் நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் கட்டிடக்கலை நிபுணர் ஹென்றி இர்வின் என்பவர் வடிவமைத்து தற்போது நீங்கள் காணும் தோற்றத்தை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எடுத்து கட்டி முடித்தனர். மைசூர் அரண்மனை இந்து, முகலாயர், ராஜ்புட் மற்றும் கோதிக் ஆகியவை கலந்த பாணியில் இந்தோ- சர்செனிக் முறையில் கட்டப்பட்டுள்ளது.

மூன்று மாடிகள் கொண்ட அரண்மனையின் சிறு தூண்களில் கூட வேலைப்பாடுகள் இருக்கும். குவிமாடங்கள் அறிய வகை பிங்க் மார்பிள் கல்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அரண்மனையின் வெளிப்புறத்தில் இரண்டு தர்பார் மண்டபங்கள், வளைவுகள், விதானங்கள், விரிகுடா ஜன்னல்கள், மற்றும் அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

தற்போது, இந்த மைசூர் அரண்மனை கர்நாடக அரசின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரண்மனையின் உள்ளே உடையார் மகாராஜா வம்சத்தினரின் நினைவு பொருட்கள், நகைகள், ராஜ அலங்கார ஆடைகள் மற்றும் ஓவியங்கள் சுற்றுலா வரும் பயணிகள் பார்வையிட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த தசரா திருவிழா இங்கு வெகு விமர்சையாக நடக்கும். அந்த நேரத்தில் மைசூர் அரண்மனை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். இதைக் காண வருடம்தோறும் ஆறு மில்லியன் மக்கள் கூடுவர். தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக போற்றப்படுவது இந்த வரலாற்று சிறப்புமிக்க மைசூர் அரண்மனை என்றால் அது மிகையாகாது.

Published by
Meena

Recent Posts