வாலி கையில் இருந்த வாட்சை விற்று சான்ஸ் தேடிய நாகேஷ்… தன்னைத் தானாகவே செதுக்கிக் கொண்ட திரைக் கலைஞன்!

தமிழ் சினிமா உலகின் ஆகச்சிறந்த நடிகர் என காலம் கடந்தும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நாகேஷ். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நாகேஷ் அவர்களின் பூர்வீகம் மைசூர். பின் தாராபுரத்தில் குடும்பம் குடியேறியது. கம்பராமாயனம் நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வத்தில் சிறுவயதிலேயே சென்னை வந்தவர் நாகேஷ். கவிஞர் வாலியுடன் தங்கியிருந்த அவர், வயிற்றுவலிக்காரனாக ஒரு நாடகத்தில் நடிப்பதைப் பார்த்து எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு கோப்பையைப் பரிசாக அளித்தார்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைதல் என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்

பின்னர் 1958ம் ஆண்டு மானமுள்ள மருதாரம் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் திரைத்துறையில் கால்பதித்தார் நாகேஷ். அந்தப் படம் பெரிய வெற்றியை பதிவு செய்யாவிட்டாலும் 1961ம் ஆண்டு தாயில்லா பிள்ளை படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.நாகேஷின் திரையுலக வாழ்க்கையில் நெஞ்சில் ஓர் ஆலயம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

தொடர்ந்து படங்கள் வரத் தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கும்போது, நாகேஷை நாயகனாக்கினார். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.

இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ.. பெரிய கேரக்டரோ… ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

கமல் நடிக்க மறுத்த அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த்… என்ன படம்னு தெரியுமா?…

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் போன்றே ஹீரோக்களுக்கு நண்பனாக  நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி… ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி.. முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா. முதுமைக் காலத்திலும், மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணம் போல நாகேஷ் நடித்த காட்சி பிரபலமானது. மேலும் கமலின் அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா, தசாவதாரம் திரைப்படங்களிலும் நாகேஷ் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் நாகேஷ் என்னும் திரை பிரம்மாண்டம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...