குந்தியிடம் அந்த ரகசியத்தை மறைத்த கண்ணன்… எதற்காகன்னு தெரியுமா? கவியரசரின் பதில் இதுதான்…

1964ல் பி.ஆர்.பந்துலு இயக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், ஜெமினிகணேசன் உள்பட பலர் நடித்த மாபெரும் வெற்றிப்படம் கர்ணன். படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத பாடல். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா என்ற பாடல்.

இந்தப் பாடலில் வருவதை எதிர் கொள்ளடா என்று கூறியிருப்பார் கவிஞர். பிறருக்கு வரும் துன்பத்தையும் நல்லவர்கள் தம் துன்பம்போல் நினைப்பார்கள். அந்த இடத்தில் தான் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். அதனால் தான் அவர்களின் மனம் உறங்காது என்பார்கள். வருவதை எதிர் கொள்ளடா என்றால், கர்மவினை என்பது பிறவி தோறும் தொடரும் வினை. அதனால், அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கீதையை நினைவூட்கிறார் கவிஞர்.

அடுத்த நான்கு அடிகள் என்ன சொல்கிறது என்று பாருங்க. தாய்க்கு நீ மகன் இல்லை. தம்பிக்கு அண்ணன் இல்லை. ஊர்ப்பழி ஏற்றாயடா… நானும் உன் பழி எதிர் கொண்டேனடா என்று சொல்லியிருப்பார் கவியரசர். அதாவது, குந்தி தேவியின் கதையே கூறப்பட்டு விட்டது. குந்தி தேவியால் தன் மகனைக் கர்ணன் என்று கூற முடியவில்லை. பாண்டவரோ கர்ணனை அண்ணன் என்று அறியாதவர்கள். குலம் தெரியாதவன் என்ற ஊராரின் ஏளனம் மட்டுமா? அவன் இறப்பிற்குக் கண்ணனே காரணமாகி, பழியை ஏற்றுக் கொள்கிறான். அதனால் கண்ணனே உன்னடி பணிவான். எனவே அவனை மன்னித்து விடு என கண்ணனே கேட்பதாக எழுதியிருப்பது கவிஞரின் நேர்மையானக் குணத்தை எடுத்துக் காட்டுகிறது.

அடுத்த நான்கு அடிகளில் இரண்டு அடிகள் கர்ணனின் குணத்தைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றன. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா… கர்ணா வஞ்சகன் கண்ணனடா… என்று தைரியமாக தன் கருத்தை சொல்லி இருந்தார் கவியரசர்.

அதாவது, துரியோதனன் மரியாதையான இடத்தைத் தனக்கு அளித்தான் என்பதற்காக, அவன் தவறானவன் என்று உணர்ந்தும் அவன் பக்கமே நிற்கிறான் கர்ணன். அதன் காரணமாகவே, அவன் வஞ்சத்தால் கொல்லப்படுகிறான். ஆனால், எல்லா வஞ்சகமான செயலுக்கும் கண்ணனே பொறுப்பேற்கிறான்.

Karnan 2
Karnan 2

ஆரம்பத்திலேயே குந்தி தேவியிடம் கண்ணன் கர்ணனின் பிறப்பின் உண்மையைக் கூறி இருக்கலாம். அல்லவா? ஆனால் அவன் மறைத்ததன் மர்மம் என்ன? தன் அத்தை, குந்தி தேவியின் மானத்தைக் காக்கவா? இல்லாவிட்டால், எந்த உண்மையைக் கூறினாலும் துரியோதனனை விட்டு கர்ணன் வரமாட்டான் என்பதற்காகவா? இல்லாவிட்டால், பாண்டவர் அவனைக் கொல்லாது விட்டு பாரதக் கதையே மாறிவிடும் என்பதற்கா? அர்ச்சுனன் கையாலேயே கர்ணனின் காலம் முடியும் என்ற விதியை அறிந்திருந்ததனாலா? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எல்லாம் அந்த கண்ண பரமாத்மாவுக்கே வெளிச்சம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews