ஷூட்டிங் போன இடத்தில் கணவன்-மனைவியாக மாறிய உச்ச நட்சத்திரங்கள்.. இதுக்குப்பின்னால இப்படி ஒரு சம்பவமா?

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி அறியாதயவர் யாருமே இல்லை. தமிழ் சினிமாவின் முதல் காமெடி நடிகராக வலம் வந்தவர். 1950-களிலேயே தனது கூர்தீட்டப்பட்ட வசனங்களைக் காமெடியாகச் சொல்லி சமுதாயத்தை பட்டை தீட்டியவர். இவரின் அடியொற்றி வந்தவர் தான் விவேக் அவர்களும். அதனால்தான் அவருக்கு சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

கலைவாணரின் நல்ல மனதினைப் பார்த்து கணவனாக ஏற்றுக் கொண்டவர்தான் அவர் மனைவி மதுரம். இவர்கள் கணவன்-மனைவி ஆனதிற்குப் பின்னால் ஒரு சம்பவம் இதான். ஒருமுறை, படப்பிடிப்பிற்காக புனே செல்ல வேண்டியிருந்த சமயம் அது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர் என். எஸ். கே, மதுரம் உட்பட அனைத்து கலைஞர்கள். அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும் வரை வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ரயிலும் புறப்பட எல்லோரும் பதைபதைக்க கிருஷ்ணன் மட்டும் சாவகாசமாக இருந்தார். முதல்நாள் பயணத்தில் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடன் பயணித்த சக நடிகர்களுக்கு தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். ஆனால் இரண்டாம் நாள் பயணத்திற்கு போதிய பணம் இல்லை.

மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு. ஆனால் மதுரமோ வெறுப்பாக தம்மிடம் இருந்த பணத்தை தந்தாலும் பின்னர் மதுரம் யோசனையில் ஆழ்ந்தார். ‘தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட’ கலைவாணரின் குணம் அவருக்கு ஆச்சர்யத்தை தந்தது.

14 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த புகழ் பெற்ற இயக்குநர்: ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத மனைவி

படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது. புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக் கதவை தட்டினார் கிருஷ்ணன்.

என்னவென்று எரிச்சலாக மதுரம் கேட்க அதற்கு என்.எஸ்.கே, ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க.. ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க தவறிட்டாங்க. எப்படியும் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்க கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையை துவக்கப் போகிறவங்க.

சின்ன கோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார் கிட்டேயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது. அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது.. இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார்.

என்.எஸ்.கே இவ்வாறு கூறியதைக் கேட்டு ‘இப்படி ஒரு குணமுள்ள மனிதரா’ என நெகிழ்ந்து போனார் மதுரம். அடுத்த கனமே தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுக்க என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் மதுரத்தின் மீது ஒரு அன்பு பிறந்திருந்தது.

அடுத்த சில நாட்களில் கிருஷ்ணனின் துாதராக மதுரம் இருந்த அறையின் கதவை தட்டினார் சக நடிகர். ‘கிருஷ்ணன் உங்களை மணக்க விரும்புகிறார்’ என்றார். அதிர்ச்சியான மதுரம் பின் ஆழ்ந்து யோசித்து தலையாட்டினார். படம் முடிந்த தருவாயில் இருக்க இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் புனேவிலேயே மதுரம் கழுத்தில் தாலி கட்டினார் கிருஷ்ணன். ஷுட்டிங்காக தனித்தனியே போனவர்கள் கணவன்-மனைவியாக திரும்ப வந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews