கலைவாணரின் யுக்தியில் காணாமல் போன கட்சி…! வீட்டிற்கேச் சென்று பாராட்டிய கல்கி..! நடந்தது என்ன..?!

தமிழ்த்திரை உலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் என்.எஸ்.கே. என ரத்தின சுருக்கமாக அழைக்கப்படும் கலைவாணர். இவரது படங்களைப் பார்க்க பார்க்க நமக்குள் ஒருவித ஆனந்தமும், குதூகலமும், புத்துணர்ச்சியும் வந்து விடும். அந்தக் காலத்திலேயே படத்திற்குப் படம் புதுமையைப் படைத்தவர் கலைவாணர்.

சிரிப்புடன் சிந்தனையைக் கலந்து பாமர மக்களின் அறியாமையைப் போக்கியவர். அதனால் தான் அவருக்குக் கலைவாணர் என்று பெயர் வந்தது.

Manamagal
Manamagal

அந்தக் காலத்தில் எல்லாம் புதிய படங்களைத் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தான் வெளியிடுவார்கள். ஆனால் கலைவாணர் இந்த விஷயத்திலும் புதுமையைச் செய்தார். அவர் நடிப்பில் வெளியான மணமகள் என்ற படத்தை 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று வெளியிட்டார்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தக் காலத்தில் இந்தச் செய்தியை எல்லாப் பத்திரிகைகளிலும் குறிப்பிட்டுக் கலைவாணரைப் பாராட்டினர்.

இந்தப் படத்தின் இயக்குனர் கலைவாணர் தான். மணமகள் படத்தை ஆகஸ்ட் 14 அன்று சிறப்புக் காட்சியை கல்கி கிருஷ்ணமூர்த்தி பார்த்தார். மறுநாள் சுதந்திரத்தினத்தன்று கலைவாணரின் வீட்டிற்கு வந்தார்.

தான் கொண்டு வந்த ரோஜாப்பூ மாலையை கலைவாணரின் கழுத்தில் சூட்டினார். அப்போது அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.

அப்போது கல்கி சொன்னார். நான் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கியமான நாள்களில் நாட்டுக்குத் தொண்டு செய்கிற பெரிய மனிதர்களின் வீட்டிற்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது தான் வழக்கம். இந்த ஆண்டு நீங்கள் என் கண் முன் நிற்கிறீர்கள்.

மணமகள் படத்தில் நாட்டுப் பிரச்சனைகளை எளிய முறையில் பாமர மக்களுக்கும் புரியும் அளவு அருமையாக விளக்கியுள்ளீர்கள் என்று பாராட்டு மழையைப் பொழிந்தார்.

உலகப் பொதுமறை திருக்குறளின் கருத்துகளையும் அதன் பெருமையையும் ஒரு படத்தில் சொல்ல வேண்டும் என்று கலைவாணர் ஆசைப்பட்டார். அதற்காக வந்தது தான் பணம். 1952ல் வெளியான இந்தப் படத்தில் கலைவாணர் மக்களின் ஒற்றுமையை உணர்த்துகிறார்.

Panam
Panam

தினா, முனா, கானா, எங்கள் தினா, முனா, கானா… இதுதான் பாடல். இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு ஒரு கட்சியின் பெயர் அல்லவா என்று சென்சார் போர்டு கட் பண்ணிவிடக்கூடாதே என்று நினைத்தார் கலைவாணர்.

அதனால் தினா முனா கானா திருக்குறள் முன்னணிக் கழகம் என்ற வார்த்தைகளையும் பாட்டிலேயே நுழைத்து சாதுரியமாக தான் சொல்ல வந்த கருத்தை திறம்படச் சொன்னார் கலைவாணர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews