பொழுதுபோக்கு

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்.. ஐபிஎல் தொடரில் முக்கிய போட்டிகளில் தடம் பதித்து சாதித்த உனத்கட்!

இன்றைய காலத்தில் இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடிக்க தொடங்கி விட்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடர்ந்து இந்திய அணியில் ஆடி வந்த சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகி விட்டது. அந்த வகையில் ஒரு முக்கியமான வீரர் தான் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்.

இவர் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்தில் ஆடி வந்த நிலையில் பின்னர் அவருக்கான வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. ஆனால் அதே வேளையில் ரஞ்சி உள்ளிட்ட ஏராளமான முதல் தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வந்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் 32 வயதிலும் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் ஆடி வரும் ஜெய்தேவ் உனத்கட், தற்போது ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் சரித்திரம் படைத்த போட்டியில் ஆடி இருந்தார். ஹைதராபாத் அணியில் இடம் பிடித்திருந்த உனத்கட், கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி ஹைதராபாத் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 277 ரன்கள் அடித்து இருந்தது. அதேபோல மும்பை அணி இலக்கை நோக்கி ஆடிய போதும் 246 ரன்கள் எடுத்து பல்வேறு சாதனைகளையும் சொந்தமாக்கி இருந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர், இரண்டாவது பேட்டிங் செய்த அணியின் அதிகபட்ச ஸ்கோர், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள் என பல சாதனைகள் இந்த போட்டியில் அரங்கேறி இருந்தது.

இதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த 2013 ஆம் ஆண்டு 263 ரன்கள் எடுத்தது தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனை 11 ஆண்டுகள் கழித்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான், யாருக்கும் கிடைக்காத ஒரு அசத்தலான பாக்கியத்திற்கு சொந்தக்காரராகி உள்ளார் ஜெய்தேவ் உனத்கட். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர், மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல அணிகளுக்காக இணைந்து ஆடியுள்ளார். அந்த வகையில், 263 ரன்களை ஆர்சிபி அணி அடித்த போது அதன் ஆடும் லெவனில் அவர் இடம்பிடித்திருந்தார்.

அந்த ரன்னை முறியடித்து 277 ரன்களை ஹைதராபாத் குவித்த சமயத்தில் அதன் பிளேயிங் லெவனிலும் உனத்கட் இடம்பிடித்திருந்தார். இந்திய அணியில் அதிர்ஷ்டம் இல்லாமல் போனாலும் ஐபிஎல் தொடரில் இப்படி இரண்டு அதிகபட்ச ஸ்கோர்களுக்கான அணியில் உனத்கட் இடம்பிடித்துள்ளதை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts