இயற்கையே கொண்டாடும் பரந்தாமன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 7



பாடல்…

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.

பொருள்..

புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்துவிட்டது. ஆணை சாத்தன் என்னும் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத்தொடங்கிவிட்டன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய்மணம் வீசும் கூந்தலையுடைய ஆயர்குலப்பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத்தாலியும், அச்சுத்தாலியும் கலகல என்று ஒலி எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக்கடையும் சலசல என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?

தலைமைத்துவம் பெற்ற பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி….

விளக்கம்..

ஆணைச்சாத்தன் என்னும் செம்போத்து பறவை சோம்பல் குணமுடையது.அதுவே எழுந்து கீச் கீச் என பரத்வாஜ பறவையோடு பரந்தாமன் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. ஆயர்குலப்பெண்கள், தயிர் கடைய ஆரம்பித்துவிட்டனர். அந்த ஒலியும் உனக்கு கேட்கவில்லையா?! கிருஷ்ணனை பற்றி நாங்களும் பாட ஆரம்பித்துவிட்டோம். அதுவும் உனக்கு கேட்கவில்லையா என உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை சீண்டி, பாவை நோன்புக்காக அவளது தோழியர் அழைப்பதாய் பாடல் அமைந்துள்ளது.

திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்..

Published by
Staff

Recent Posts