தமிழ்வருடப் பிறப்பை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? முதலில் வாங்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

நாளை பிறக்க இருக்கிறது தமிழ் புத்தாண்டு – சோபகிருது வருடம். ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஆண்டின் தொடக்கம் நமக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நல்ல மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

அதனால் இந்த ஆண்டிலும் நாம் வேண்டிக் கொள்வோம். நல்ல வெற்றியையும், மகிழ்ச்சியையும், எல்லோரது வாழ்க்கையிலும் இன்பத்தைத் தரும் என்பது பஞ்சாங்க கணிப்புகள். நாமும் இதையே இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்.

நாளை புத்தாண்டு கொண்டாடுவதற்காக இன்றே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டையும், பூஜை அறையையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Kani kaanuthal
Kani kaanuthal

கனி காணுதல் நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை இன்றே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டின் நடுவில் மேஜை அமைத்து கண்ணாடி முன் கனிகளை வைத்து விடுவார்கள். காலை எழுந்ததும் அதைப் பார்த்து விடுவார்கள். சிலர் படுக்கை அறையிலேயே தலைமாட்டுக்கு அருகில் வைத்துக் கொள்வார்கள்.

முகம் பார்க்கும் கண்ணாடி, முக்கனிகள் அதாவது மா, பலா, வாழை, வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை, மலர்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி நகைகள் வைத்துக் கொள்ளலாம். சிலர் நவதானியங்களையும் சேர்த்து வைப்பார்கள். அதில் தவறு இல்லை. எழுந்ததும் நாம் பார்ப்பது போன்ற அமைப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

காலை எழுந்ததும் இதைத் தான் முதலில் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு அதைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு இந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது செய்து வழிபடலாம். அல்லது பழங்களையே வைக்கலாம்.

காலை 6 மணியில் இருந்து 10.20 மணி வரை இந்த வழிபாடை செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு நாம் என்ன செய்யலாம்? காலை அல்லது மாலை கோவிலுக்குப் போய் வர வேண்டும். வேப்பம்பூ ரசம், மாங்காயும், வெல்லமும் சேர்த்து வைக்கும் பச்சடி என்ற இந்த இரண்டையும் இன்றைய உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அறுசுவையும் இருக்க வேண்டும் என்பதால் இந்த சுவையைத் தரும் உணவுகளையும் சேர்க்க வேண்டும். மதிய நேரத்தில் சுவாமிக்கு நாம் தயாரித்த உணவையே நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.

Uppu Manjal
Uppu, Manjal

மதியம் 12 மணி முதல் 1.30 வரை படையல் போட்டு வழிபடலாம். பிறகு மாலை வேளையில் கடவுளை வழிபட்டு புத்தாண்டை நிறைவு செய்து கொள்ளலாம். புத்தாண்டு அன்று பெரியோர்களிடம் ஆசி வாங்குவது நல்லது. மஞ்சளும், உப்பும் இன்று வாங்குவது மிகவும் நல்லது. இதைக் காலையில் 10.20 மணிக்குள் வாங்கலாம்.

அல்லது மதியம், மாலை 6 மணிக்குப் பிறகு விளக்கேற்றும் முன்பாக வாங்கி வைக்க வேண்டும். நாம் புத்தாண்டு அன்று காசை கடையில் கொடுத்து செலவு செய்யும் முதல் பொருள் இதுவாகத் தான் இருக்க வேண்டும். அன்றைய தினம் அன்னதானம் செய்யலாம். வஸ்திர தானம் செய்யலாம். இந்த ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews