வாழ்க்கை முறை

உங்க வீட்டு குளிர்சாதன பெட்டி துர்நாற்றம் அடிக்கிறதா? அப்போ இந்த 5 வழிமுறைகளை பின்பற்றி பாருங்க…!

குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அனைத்து வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பால், மாவு, காய்கறிகள், தயிர் போன்ற உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாத்திட இந்த குளிர்சாதன பெட்டி பெரிய அளவில் உதவி புரிகிறது. ஆனாலும் பல வீடுகளில் மீதமாகி தூக்கி எறிய மனம் வராத  உணவுகள், எறும்பு  மொய்த்து விடக்கூடிய உணவுகள் அல்லது இனிப்பு வகைகள், சில துரித உணவுகளுடன் கூடுதலாக வழங்கப்படும் சாஸ் பாக்கெட்டுகள் அல்லது ஊறுகாய்கள் போன்ற பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய கிடங்காக குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் அந்த குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கி விடுகிறது. எனவே அந்த குளிர்சாதன பெட்டியை முறையாக பயன்படுத்த வேண்டும். துர்நாற்றம் வீசாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

1. சுத்தம் செய்தல்:

முதலில் குளிர்சாதன பெட்டியை நிறுத்தி வைத்து நன்கு துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். குளிர்சாதன பெட்டியில் உள்ள அடுக்குகளில் கிளிங் ராப் அல்லது அதற்கென இருக்கும் மேட்களை போட்டு வைத்தால் நல்லது. அனைத்து அடுக்குகளையும் மற்றும் குளிர்சாதன பெட்டியின் கதவில் உள்ள ட்ரேக்களையும் நன்கு துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். இதனை இரு வாரத்திற்கு ஒருமுறை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. நன்கு மூடக்கூடிய காற்று புகாத கொள்கலன்களை பயன்படுத்துதல்:

உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது என்றால் காற்று போகாத நன்கு மூட கூடிய வகையில் உள்ள கொள்கலனில் வைத்து சேமித்து வைக்கவும். கிரேவிகள் ஏதேனும் பிரிட்ஜில் சிந்திவிட்டால் துர்நாற்றம் ஏற்படும். ஒரு பொருளின் மணம் இன்னொரு பொருளின் மீது பரவாமல் இருக்க நன்கு மூடி சேமித்து வைத்தல் அவசியம்.

3. காலாவதியான பொருட்களை அவ்வபோது அகற்றுதல்:

சிலர் உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துவிட்டு உணவை வைத்ததையே மறந்துவிடுவார்கள். அது நீண்ட காலத்திற்கு குளிர்சாதன பெட்டியின் உள்ளேயே இருந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது காலாவதியான உணவுப் பொருட்களை அகற்றி விட வேண்டும்.

4. வெப்பநிலை சரிசெய்தல்:

குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையானது மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இல்லாமல் சரியான வெப்ப நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வெப்பநிலை சரியாக இல்லாமல் இருந்தால் அது உணவுப் பொருட்களை பாதிக்கும் சீக்கிரம் சேதப்படுத்தி உணவு பொருட்களை உன்னை இயலாத நிலைக்கு மாற்றி விடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

5. இயற்கையான பொருட்களை நறுமணத்திற்கு பயன்படுத்துதல்:

பேக்கிங் சோடா, காபி கொட்டை, வினிகர் அல்லது எலுமிச்சை பழ துண்டு இவற்றை ஒரு திறந்த கொள்கலனில் வைத்து குளிர்சாதன பெட்டியின் ஒரு மூலையில் வைத்து விட்டால் துர்நாற்றத்தை குறைக்கும்.

Published by
Sowmiya

Recent Posts