குளியலறை மற்றும் வாஷ்பேஷனில் உள்ள குழாய்கள் பளபளவென்று பளிச்சிட இந்த முறைகளை பின்பற்றி பாருங்க!

குளியலறை வாஷ்பேஷனில் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடியது தண்ணீர் குழாய் தான். ஒரு நாளைக்கு பலமுறை பயன்படுத்தும் இந்த குழாய்கள் பளிச்சென்று இருக்கிறதா என்று நாம் கவனிப்பது குறைவுதான். பல வீடுகளில் இந்த குழாய்கள் உப்பு படிந்தது போன்று அழுக்கு படிந்தது போன்று காணப்படும். எவ்வளவுதான் கழுவினாலும் இந்த கரைகள் நீங்காது குழாய்களில் விடாப்பிடியாக படிந்து இருக்கும்.

என்னதான் கழிவறை மற்றும் வாஷ்பேஷனை சுத்தமாக வைத்திருந்தாலும் இந்த தண்ணீர் குழாய்கள் பளிச்சென்று இருந்தால் தான் முழுமையாக சுத்தம் செய்த திருப்தி கிடைக்கும். மேலும் குழாயை அடிக்கடி தொடும் நாம் அந்த குழாய் சுத்தமாக வைத்திருந்தால் தான் கிருமிகள் பரவாமல் பாதுகாப்பாய் இருப்பதற்கு வழிவகை செய்ய முடியும்.

istockphoto 155428889 612x612 1

குழாய்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்:

1. வினிகர்:

இது பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய ஒரு சுத்திகரிப்பு பொருள் ஆகும்.

வினிகரை சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துணியினை இந்த கரைசலில் நனைத்து குழாய் முழுவதும் நன்கு துடைத்து கொள்ள வேண்டும்.

ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவினால் குழாய்கள் பளபளப்பாக மாறும்.

ஏதேனும் விடாப்பிடியான கறைகள் இருந்தால் ஒரு பல் துலக்கும் பிரஷினை இந்த கரைசலில் நனைத்து குழாய்களில் தேய்த்து கழுவினால் கறைகள் நீங்கிடும்.

2. பேக்கிங் சோடா:

குளியலறை குழாய்களில் இருக்கும் விடாப்பிடியான கரையை நீக்க மற்றொரு சிறந்த தேர்வு பேக்கிங் சோடா ஆகும். பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்த இந்த பசையினை பல் துலக்கும் பிரஷ் கொண்டு குழாய் முழுவதும் தேய்த்து சில நிமிடங்கள் பிறகு கழுவினால் குழாய்கள் கறைகள் ஏதும் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.

istockphoto 509278027 612x612 1

3. எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள அமிலம் குழாய்களில் உள்ள விடாப்பிடியான கறை மற்றும் உப்புக்களை நீக்கிட வெகுவாக துணை புரிகிறது. எலுமிச்சை பழத்தை குழாய்களில் நன்கு தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற‌ வைத்து பிறகு கழுவினால் குழாய்களில் உள்ள கறைகள் நீங்கிடும்.

4. பாத்திரம் துலக்கும் திரவம்:

பாத்திரம் துலக்கும் திரவத்தினை (dishwashing liquid) சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பஞ்சினை இந்த கரைசலில் நனைத்து பைப் முழுவதும் அழுத்தி துடைக்க கறைகள் நீங்கும் குழாய்கள் பளிச்சென்று இருக்கும்.

இதில் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு வாரம் இரு முறை என சுழற்சி முறையில் செய்து வந்தால் வீட்டில் உள்ள குழாய்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews