உங்கள் அறையை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. படுக்கையறையை ஒழுங்குபடுத்தும் ஐடியாக்கள்!

ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை பெரிதும் விரும்புவார்கள். நண்பர்கள் உறவினர்கள் சூழ இருப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் தங்களுக்கே தங்களுக்காக சில நிமிடங்களை ஒதுக்குவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதனால்தான் ஒவ்வொருவரும் தங்களுக்கு என உரிய அறையை மிகவும் விரும்புவர். ஏனெனில் அவர்களின் அறை தான் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை வலுப்படுத்தும். வீட்டிலேயே மிகவும் பிடித்தமான இடம் எது என்று கேட்டால் பலருக்கும் தங்கள் அறை தான் என்ற பதில் கூற தோன்றும். வேலை மிகுதியால் அனுப்பாய் வீடு திரும்பும் போது பலருக்கும் அந்த அறை சொர்க்கம் போல் தோன்றும். இப்படிப்பட்ட அறை உண்மையிலேயே சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அது சுத்தமாகவும் ஒழுங்கு முறையோடும் இருத்தல் மிகவும் அவசியம்.

mess room

ஆனால் சிலருக்கு அறையை ஒழுங்கு முறையோடு வைத்திருப்பது கடினமான விஷயமாக தோன்றுகிறது.  அலுவலகம், கல்லூரி, பள்ளி போன்ற இடங்களுக்கு செல்லும் அவசரத்தில் பலரும் தங்கள் அறையில் அலமாரியை கலைத்தது கலைத்தபடி போடுவது உண்டு. ட்ரெஸ்ஸிங் டேபிளிலும் எடுத்தது எடுத்தபடி வைக்காமல் கலைந்து இருக்கும், புது உடைகளிலிருந்து கிழிக்கப்பட்ட விலைப்பட்டியல் கூட பல நாட்களாக அறைக்குள்ளேயே சுற்றி கொண்டு இருக்கும்.

இப்படியெல்லாம் இல்லாமல் நமக்கு முக்கியமான அந்த அறையை மிகவும் சுத்தமாய் வைத்தல் அவசியம். எப்படி சுத்தப்படுத்துவது? எவ்வாறு ஒழுங்கு படுத்துவது? என்று குழம்ப வேண்டாம். இதோ இந்த முறைகளை பின்பற்றி பாருங்கள்.

mess

1. முதலில் அது உங்களுடைய அறை. பழைய பொருட்களையும் பயன்படுத்தாத பொருட்களையும் சேமித்து வைக்கும் கிடங்கு அல்ல. முதலில் உங்கள் அறையில் பயன்படுத்தாத பொருட்களை ஏதேனும் அட்டைப் பெட்டிகளில் போட்டு வைத்திருந்தால் அதனை முதலில் அப்புறப்படுத்தவும். பயன்படுத்தாத உடைகள் அல்லது பொருட்களை யாருக்கேனும் உதவியாக இருக்கும் என நினைத்தால் கொடுத்து விடுங்கள்.

2. உங்கள் அறையில் இருக்கும் தேவையற்ற பில், உடைகளிலிருந்து கிழிக்கப்பட்ட விலைப்பட்டியல், நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுவிட்டு வைத்த காகிதங்கள் என ஏதேனும் குப்பைகள் இருந்தால் அதனை முழுமையாக அப்புறப்படுத்துங்கள்.

bed cover

3. உங்கள் படுக்கையின் விரிப்பு, தலையணை உறை, ஜன்னலின் திரைச்சீலைகள், மிதியடி ஆகியவற்றை நன்கு துவைத்து விடுங்கள். ஏதேனும் அணிந்த ஆடைகள் அழுக்காகி கழட்டி கீழே போட்டு இருந்தால் அந்தத் துணிகளை அழுக்குத் துணிகளை போடும் கூடைக்குள் போட்டு விடுங்கள். சலவை செய்த துணிகளை மடித்து வைத்து விடுங்கள்.

4. உங்கள் அருகில் இருக்கும் படிக்கும் மேஜையில் உள்ள புத்தகங்கள், கடிகாரம், பேனா ஸ்டாண்ட் ஆகியவை அழகாக இருக்கும் படி அடுக்கி வையுங்கள். இவற்றை அடுக்கும் முன்பு மேஜையில் தூசிகள் ஏதும் இல்லாதவாறு துடைத்து சுத்தப்படுத்துங்கள்.

5. ட்ரெஸ்ஸிங் டேபிளில் பயன்படுத்தாத கிரீம்கள், எண்ணெய்கள், மேக்கப் பொருட்கள் இருந்தால் அவற்றை காலாவதி தேதி சோதித்து அப்புறப்படுத்தி விடுங்கள். பயன்படுத்தக்கூடிய பொருட்களை எடுப்பதற்கு ஏதுவாக அடுக்கி விடுங்கள். தினமும் அலுவலகம், கல்லூரி செல்வதற்கு தேவைப்படும் பொருட்களை எளிதில் எடுக்கும் வண்ணமும். விசேஷ நாட்களுக்கு தேவைப்படும் ஒப்பனை பொருட்களை தனியாகவும் அடுக்கி வைத்து விடுங்கள்.

room cupboard

6. ட்ரெஸ்ஸிங் டேபிளின் கண்ணாடிகள், ஜன்னல்கள் ஆகியவற்றில் தூசிகளை துடைத்து சுத்தப்படுத்துங்கள். அலமாரிகளில் துணிகள் கலைந்து இருந்தால் அவற்றையும் முழுமையாக அடுக்கி வைத்து விடுங்கள்.

7. அறை முழுவதும் தூசிகள் இல்லாதவாறு சுத்தப்படுத்திவிட்டு தரையை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.

mop room

8. கூடுமானவரை படுக்கை அறையில் படுக்கையின் மீது அமர்ந்து உணவு உண்ணுவதை தவிர்த்து விடுங்கள்.

9. முதல் நாள் இரவே மறுநாள் தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டால் மறுநாள் அவசர கதியில் அறையில் உள்ளவற்றை கலைத்து அறையை தலைகீழாக்கும் வேலை இருக்காது.

என்றாவது ஒரு நாள் இதுவற்றையெல்லாம் செய்யும்பொழுது பெரிய வேலையாக தோன்றலாம். ஆனால் தினசரி ஒரு சில நிமிடங்கள் அறையை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினால் அறை எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். விரிப்புகளை துவைத்தல், ஜன்னல், தரையை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்துதல், அலமாரியில் துணிகளை அடுக்குதல், குப்பை கூடையில் உள்ள குப்பைகளை வெளியேற்றுதல் ஆகியவற்றை வாரம் ஒரு முறை என்று சுழற்சி முறையில் செய்யலாம். நம்மை சுற்றியுள்ள இடம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தால் மன நிம்மதி தானாக வரும். குறிப்பாக உறங்கும் அறை சுத்தமாக இருக்கும் பொழுது அது நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews