பொழுதுபோக்கு

இளையராஜா, பாரதிராஜா இடையே உருவான பிரச்சனை.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு காத்திருந்த சவால்?.. தடைகள் தாண்டி ஜெயித்தது எப்படி?

இந்திய சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

அது மட்டுமில்லாமல், Slumdog Millionare என்னும் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு தேசிய விருதுகளை அவர் வென்றதால் சர்வதேச சினிமாவின் கவனமும் ஏ.ஆர். ரஹ்மான் பக்கம் திரும்பி இருந்தது.

புதிய இசையமைப்பாளர்கள் ஏராளமானோர் அறிமுகமான வண்ணம் இருந்தாலும் தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை வைத்து தனது இசையால் ரசிகர்களை கட்டிப் போடுவதிலும் வில்லாதி வில்லனாக இருக்கிறார் ரஹ்மான். சமீபத்தில் அவரது இசையில் பொன்னியின் செல்வன் 2, பத்து தல, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருந்தது. இன்னும் பல படங்களுக்கும் இசையமைப்பதில் ஏ.ஆர். ரஹ்மான் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி இருக்கையில், பாரதிராஜா படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

ஆரம்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் மாடர்ன் ஸ்டைலில் இருந்தது. அப்படி இருக்கையில், கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கும் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான வாய்ப்பு கவிஞர் வைரமுத்து மூலம் ரஹ்மானுக்கு கிடைத்தது.

பாரதிராஜாவுக்கும், அவர் படங்களில் இசையமைத்து வந்த இளையராஜாவுக்கும் இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் அந்த சமயத்தில் இருந்தது. இதனால், கிழக்கு சீமையிலே படத்திற்கு புதிய இசையமைப்பாளரை பாரதிராஜா தேட, ஏ.ஆர். ரஹ்மானை கைக்காட்டினார் வைரமுத்து. ஆனால், பாரதிராஜா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை எப்படி பொருந்தும் என்ற கேள்வியும், விமர்சனமும் ஒரு பக்கம் எழுந்தது.

இதற்கு காரணம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா அற்புதமாக இசையமைத்து ஹிட் கொடுத்தது தான். அதே போன்றொரு இசையை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்குவாரா என்ற கருத்து பரவலாக அந்த சமயத்தில் இருந்தது. விமர்சனங்கள் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்த ஏ.ஆர். ரஹ்மான், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என பாரதிராஜா இயக்கத்தில் உருவான படங்களுக்கு கிராமத்து பின்னணியில் அற்புதமாக இசையமைத்து தான் அனைத்து ஏரியாவிலும் கில்லி என்பதையும் நிரூபித்து காட்டினார்.

மேலும் அந்த படங்களின் பின்னணி இசையிலும் 20 நாட்களுக்கு மேல் பணியாற்றி மிக அற்புதமான படைப்பை உருவாக்கி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

Published by
Ajith V

Recent Posts