உங்கள் நலனே எங்கள் நலன்… தகிக்கும் அக்னி பகவானிடம் இருந்து தப்பிப்பிழைக்க இதோ சில டிப்ஸ்கள்…

ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை விட்டதும் கோடையின் தாக்கம் தொடங்கி விடும். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. கொளுத்தும் கோடை தகிக்கும் இந்த நேரத்தில் மக்கள் எங்காவது ஒதுங்க இடம் கிடைக்காதா, குளிர்ந்த காற்று வீசாதா, நீர் நிலைகள் தென்படாதா என தேடித் தேடி அலைகின்றனர். இவ்வளவுக்கும் இன்னும் அக்னியே ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்பாகவே வழக்கத்திற்கு மாறாக வெயில் செஞ்சுரி போட்டுக் கொண்டு இருக்கிறது. என்ன தான் இருந்தாலும் சம்பாதிக்க வேண்டுமே என்ற ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு வெயிலானாலும் சரி.

மழையானாலும் சரி என்று ஓடி ஓடி உழைக்கிறார்கள் உழைப்பாளி வர்க்கத்தினர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பதற்கேற்ப எவ்வளவு தான் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போனாலும் உடலையும் கொஞ்சம் கவனிங்க பாஸ். வாங்க உங்களுக்கும், உங்க குழந்தைகளுக்கும் கோடையில் இருந்து தப்பிக்க அருமையான டிப்ஸ்களை அள்ளித் தருகிறோம்.

உச்சிவெயிலின் போது அதாவது நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை திறந்த வெளியில் நடமாடாதீர்கள். குறிப்பாக மாணவ, மாணவியர் இந்த நேரங்களில் வெயிலில் விளையாடாதீர். தேவையான அளவு தண்ணீர் பருகுங்கள். எங்காவது பயணம் மேற்கொண்டால் மறக்காமல் வாட்டர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள். எலுமிச்சைச்சாறு, சர்பத், நீர்மோர், லஸ்ஸி, பழச்சாறு அவ்வப்போது பருகுங்கள்.

Fruits
Fruits

பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை மறக்காமல் சாப்பிடுங்கள். தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பது நல்லது. ஓய்வு நேரங்களில் மரக்கன்றுகள் நடுவது நல்லது. நாளை உங்க சந்ததியினருக்கும் அது நல்ல பலன் தரும்.

உங்க வீட்டு சுட்டிக்குழந்தைகள், சிறுவர்களுக்கு சதுரங்கம், கேரம் போர்டு விளையாடச் சொல்லிக் கொடுங்கள். பெண்கள் வெளியில் செல்லும் போது மறக்காமல் குடையைக் கொண்டு செல்லுங்கள்.

பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணிபுரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் குறைந்தவர்கள், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடையில் கூடுதலான கவனமுடன் இருக்க வேண்டும். இவர்கள் அதிகளவு நீர் பருக வேண்டும். வெளியில் செல்லும்போது பருத்தியால் ஆன ஆடையை அணியுங்கள்.

சூரிய ஒளிபடும் இடங்களில் ஜன்னல்களைத் திரை கொண்டு மூடி விடுங்கள். இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீட்டினுள் புக, ஜன்னல்களைத் திறந்து வையுங்க. ஆண்கள் வெளியில் செல்கையில் தலையைப் பாதுகாக்க குடை, தொப்பி, குல்லா, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அவசர வேலை என்றால் தவிர மற்ற வேலைகளுக்கு வெயில் குறைந்ததும் மாலை வேளையில் வெளியே சென்று வாருங்கள். அன்றாட வானிலைத் தகவல்களை செய்தித்தாள், டிவி, ரேடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள். முதியோர், நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.

Plant tree
Plant tree

வீட்டைக் குளிர்நிலையில் வைக்க திரைச்சீலைகள், சூரிய ஒளி தடுப்பான்களைப் பயன்படுத்துங்கள்.

மாடிவீட்டுக்காரர்கள் பகல் பொழுதில் கீழ்தளத்தைப் பயன்படுத்துங்கள். வெயிலில் வேலை செய்பவர்கள் அவ்வப்போது நிழலில் ஓய்வெடுங்கள். வேலை செய்யும் இடத்தில் தண்ணீர் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் பருகுங்கள். தலைவலி, தலைசுற்றல் வந்தால் முதலுதவியாக நீர் பருகுங்கள். செருப்பு இல்லாமல் வெயிலில் நடக்காதீர்கள். அதே போல உச்சிவெயில் வேளையில் சமைக்காதீர்கள். சமையல் அறையைக் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள்.

காபி, கேஸ் அடைக்கப்பட்ட கூல்டிரிங்ஸ், அதிகமான சர்க்கரைச் சத்துள்ள பானங்களைப் பருகாதீர்கள். அதிகளவு புரதச்சத்துள்ள உணவு, கெட்டுப்போன உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

சிறிய அளவு வெப்பம் தாக்குபவர்களுக்கு கொப்புளங்கள், நீர்க்கோர்வை, வீக்கம், தசைப்பிடிப்பு, உணர்வு இழப்பு ஆகியவை ஏற்படும். அதிகளவு வெப்பம் தாக்கியவர்களுக்கு கடும் மூச்சுத்திணறல், வெப்பச்சோர்வு, களைப்பு, பக்கவாதம், வறண்ட தோல், தாகம், குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் தளர்ச்சி, அதிக வியர்வை, வியர்வையே இல்லாமை உண்டாகும்.

தலைபாரம், தலைசுற்றல், படபடப்பு, வேகமான இதயத்துடிப்பு, மூச்சு இரைத்தல், சிறுநீர் குறைவு, மயக்கம், உணர்விழப்பு, வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோன்ற நோய் உள்ளவர்கள் உடனடியாக யாருடைய உதவியையாவது நாட வேண்டும்.

குளிர்ச்சியான இடத்திற்கு விரைந்து நகர்ந்து விட வேண்டும். குடிநீர், பழச்சாறு போன்ற பானங்கள் அருந்தலாம். மயக்கநிலையில் உள்ளவர்களை பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். அவர்களது சுவாச பாதை, சுவாசம், நாடித்துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

கோடையில் அம்மைநோய் அதிகம் பரவும் நோய். குழந்தைகளையே அதிகம் தாக்கும். பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை போன்ற நோய்கள் வரும். இது குழந்தைகள், நோய் எதிர்ப்பு குறைந்தவர்களுக்கு வரும்.

தட்டம்மை, சளி, காய்ச்சல், இருமல், மூக்கில் ரத்தம் வருதல், கண்ணில் நீர் வடிதல் தட்டம்மையின் அறிகுறிகள். முகம், காதின் பின்பகுதி வேர்க்குரு வரும். இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews