வாழ்க்கை முறை

தந்தையர் தினத்திற்கு என்ன கிப்ட் வாங்குவது? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அருமையான 5 கிப்ட் ஐடியாக்கள்…!

பெரும்பாலான மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களுடைய தந்தை தான் சூப்பர் ஹீரோ. குழந்தை பருவத்தில் அனைத்து குழந்தைகளும் தந்தையை போலவே அனைத்தும் செய்ய வேண்டும் என்று அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய அப்பாவை தான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல் புரிவர்.

பதின்ம வயதில் அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படுவது இயல்பு. பதின்ம வயதில் தந்தையின் கண்டிப்பும் கோபமும்  ஏதோ அப்பா என்றால் மிகப்பெரிய கோபக்காரர், நம் மீது பாசம் இல்லாதவர் என்பது போல தெரியும். ஆனால் அவரின் கண்டிப்பும் கோபமும் நம் மீது உள்ள அக்கறையினால் தான் வந்தது என்பதை புரிந்துகொள்ள சில காலம் எடுக்கும்.

வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைத்து அவரை வருத்தி நம்மை செதுக்குபவர். நமக்காக பல தியாகங்களைச் செய்யும் நம்முடைய தந்தைக்கு என்ன செய்யலாம்? என்ன செய்தாலும் அவருடைய அன்புக்கு ஈடாகாது என்றாலும் வரவிருக்கும் தந்தையர் தினத்திற்கு (மே 18) அவர் முகத்தில் சிறு புன்னகையை வரவழைக்கும் விதமாக ஏதேனும் ஒரு கிப்ட் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அவருடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் என்ன கிப்ட் வாங்கலாம் என்பதற்கான சில ஐடியாக்களை பார்ப்போம்.

வலி நிவாரணி மசாஜர்:

வயதான காலத்தில் பெரும்பாலும் அனைவருக்கும் இடுப்பு, கை, கால், மூட்டு, முதுகு, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. இந்த வலிகளை குறைத்திட மருந்துகள், மாத்திரைகள் என எத்தனை தான் பயன்படுத்தினாலும் வயதானவர்களுக்கு வலி குறைந்தபாடு இல்லை. அவர்களுக்கு பயன்படும் வகையில் வலி நிவாரணம் தரக்கூடிய மசாஜர்களில் ஏதேனும் ஒன்றை பரிசாக அளிக்கலாம். வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கும் பிள்ளைகளோ இல்லை படிப்பிற்காக தொலைதூரம் சென்று ஊரில் இருக்கும் தந்தையின் மூட்டு வலி குறித்து கவலை கொள்ளும் பிள்ளைகளோ தன் தந்தைக்கு ஒரு நல்ல மசாஜரை வாங்கி கொடுத்தால் அது அவர்களுக்கு பெரிய உதவியாகவும் இருக்கும் தந்தையர் தினத்திற்கு நல்ல பரிசாகவும் இருக்கும்.

தண்ணீர் பாட்டில்:

தண்ணீர் பாட்டிலா? சாதாரண தண்ணீர் பாட்டில் எப்படி வாங்கி கொடுப்பது என்று நினைக்க வேண்டாம். தண்ணீர் பாட்டில்களிலேயே தற்பொழுது எவ்வளவு நேரத்திற்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வாட்டர் பாட்டில்களும், ஆரோக்கியத்திற்கு உகந்த காப்பர் வாட்டர் பாட்டில்களும் சந்தையில் கிடைக்கின்றன.

இவற்றில் எது உங்கள் தந்தைக்கு சிறந்தது என பார்த்து பரிசளிக்கலாம்.

இதயத்துடிப்பு மானிட்டர்:

வயதானவர்கள் உடல் நிலை மீது தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டே இருத்தல் அவசியம். சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கணக்கிடும் கருவி அல்லது நடைபயிற்சி மேற்கொள்பவருக்கு பிட்னஸ் ட்ராக்கர் இல்லையெனில் இதயத் துடிப்பை தினமும் கணக்கிடும் மானிட்டர் இவற்றுள் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கலாம்.

ஒரு கூடை பழங்கள் அல்லது நட்ஸ்கள்:

உங்கள் தந்தைக்குப் பிடித்த பழங்களோ அல்லது அவர் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நட்ஸ் வகைகளோ அவருக்கு பரிசாக கொடுக்கலாம். நீங்களே ஒரு அழகிய கூடையை வாங்கி அதில் உங்கள் தந்தைக்கு பிடித்த பழங்கள் அல்லது நட்ஸ்களை அழகாக அடுக்கி ரேப் செய்து உங்கள் கைப்பட அழகு செய்து கொடுத்தால் உங்கள் தந்தைக்கு அது கூடுதல் மகிழ்ச்சியை தரும்.

மென்மையான படுக்கை விரிப்பு அல்லது தலையணை: 

ஆரோக்கியமான உடலுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியம். உங்கள் தந்தை நீண்ட காலமாக ஒரே படுக்கையையும் தலையணையும் பயன்படுத்தினால் நீங்கள் அவற்றை மாற்றி மிருதுவான வசதியான புதிய படுக்கை விரிப்பு அல்லது தலையணைகளை வாங்கித் தரலாம்.

Published by
Sowmiya

Recent Posts