குணாவின் மொத்த பாடலையும் 2 மணிநேரத்தில் முடித்த இசைஞானி.. ராஜாதி ராஜாதான் போல..

தமிழில் பழைய படங்கள் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி கவனம் ஈர்த்து வரும் வேளையில் மலையாள சினிமாவோ உலகத்தரத்தினை நோக்கி ஜெட்வேகத்தில் செல்கிறது.

இதில் தற்போது கடைசியாக வெளியாகி மல்லுவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். மொழி கடந்து பிரேமம்  படத்தினை தூக்கிக் கொண்டாடிய தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் இந்த குணா குகை தான்.
தமிழில் 1991ஆம் தீபாவளி அன்று சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான குணா திரைப்படம் கமல்ஹாசனின் அற்புத நடிப்பை வெளிக்கொணர்ந்த திரைப்படங்களில் ஒன்று. சைக்கோ மாதிரியும் இல்லாமல், சற்று லேசாக மன நலம் பாதிக்கப்பட்டவராக கமல் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். கமலுக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தில் நாம் கவனித்தது குகை. இந்த குணா குகையில் உருவான பாடல்தான் கண்மணி அன்போடு காதலன் பாடல்.
தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் குணா குகையில் திரில்லர் படமாக உருவாகி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இதனால் மீண்டும் டிரண்ட் ஆன குணா குகை பற்றித்தான் தற்போது வலைதளங்கள் முழுக்க ஒரே பேச்சு. டிரெண்டிங்கில் இருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்குக் காரணமான குணா குகை பற்றியும், படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடலைப் பற்றியும் குணா படத்தின் இயக்குநர் சந்தானபாரதி தற்போது பேட்டிகளில் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்திற்கான பாடல்களை இளைராஜா 2 மணி நேரத்தில் கம்போஸிங் செய்து கொடுத்தார் என வியக்க வைக்கும் தகவலைக் கூறியிருக்கிறார் சந்தான பாரதி. படத்தின் காட்சிகளைக் கூறி விளக்கிய பின்பு, ஒரு பாடல் மடல் எழுதும் போன்று வேண்டும் என்று கேட்க, அதற்கு உதாரணமாக ‘அன்புள்ள மான்விழியே.. ஆசையில் ஓர் கடிதம்..“ என்ற பழைய திரைப்படப் பாடலை உதாரணம் சொல்ல உடனே கவிஞர் வாலி மளமளவென ‘கண்மணி அன்போடு காதலன்..‘ என்ற பாடலை எழுத அதற்கு இளையராஜா இசையமைத்தாராம். மேலும் மொத்தப் பாடல்களுக்கும் 2 மணிநேரத்தில் கம்போஸிங் செய்து மிரள வைத்தாராம் இசைஞானி.
மேலும் குணா படத்திற்காக முதலில் போடப்பட்டிருந்தது மலை உச்சியில் ஒரு சர்ச் செட் தானாம். ஆனால் அப்பொழுது ஒரு டூரிஸ்ட் கைடு டிரக்கிங் செல்லும் பாதையில் அமைந்துள்ள இந்த குகைப் பகுதியைக் காட்ட கமல்ஹாசனும், சந்தானபாரதியும் மகிழ்ந்து போய் அந்த இடத்தில் வனத்துறையினரின் அனுமதியுடனும், உதவியுடனும் இந்த பட ஷுட்டிங்கை எடுத்து முடித்திருக்கின்றனர். இன்று மஞ்சும்மல் பாய்ஸ் மூலமாக மீண்டும் குணா குகை டிரெண்டிங் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...