கள்ளிப்பால் to பாயாசம் : 3 இசை ஜாம்பவான்களின் இசையில் பாடிய தேனி குஞ்சரம்மா

90 களின் பிற்பகுதியில் இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் இசைத்துறையை ஆக்கிரமிக்க பாடலுக்கு பாடல் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் நாட்டுப்புற பாடல்களுக்கு தங்களது இசை மூலம் உயிர் கொடுத்தனர். இவ்வாறு பாடலாசிரியரே இல்லாமல் மனதில் தோன்றியதை பாடலாக வெளிப்படுத்தும் நாட்டுப்புற பாடல்களுக்கு எண்ணற்ற இரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில் நாட்டுப்புற பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அன்றைய கலைஞர்கள் புஷ்வவனம் குப்புசாமி, கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனியம்மா, தேனி குஞ்சரம்மா, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தேக்கம்பட்டி சுந்தரராஜன் ஆகியோர்.

திரைப்படப் பாடல்களைப் போன்று இவர்கள் பாடலும் ஒருபுறம் கிராமத்து மண் வாசத்துடன் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த காலத்தில் தேனி குஞ்சரம்மாவை தனது கருத்தம்மா படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளைக் கொல்லும் முக்கிய பாத்திரத்தில் தேனி குஞ்சரம்மா நடித்ததால் பெரும்புகழ் பெற்றார். மேலும் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் போது இவர் பாடும் நாட்டுப்புறப் பாடல் கண்ணீரையே வரவழைக்கும். இதனை இசையால் ஏ.ஆர். ரஹ்மான் உயிர் கொடுத்திருப்பார்.

இளம் வயதில் வாழ்வை முடித்துக் கொண்ட தமிழ் நடிகைகள் : இதெல்லாம் தான் காரணமா?

தொடர்ந்து தேனி குஞ்சரம்மாவுக்கு வாய்ப்புகள் வர ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்கள் பாடினார். அதில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த பாடல் எதுவென்றால் காதலன் படத்தில் இடம்பெற்ற பேட்டராப் பாடல். மேலும் ஏ.ஆர். ரஹ்மான்  தாஜ்மஹால், முத்து, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் தேனி குஞ்சரம்மாவைப் பாட வைக்க அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.

இதனை அறிந்த இளையராஜா ஒரே ஊர்க்காரரான தேனி குஞ்சரம்மாவுக்கு தேனியைச் சுற்றி எடுக்கப்பட்ட விருமாண்டி படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். கிடைத்த இடத்திலெல்லாம் கோல் அடித்த தேனி குஞ்சரம்மா விவேக்குடன் காதல் சடுகுடு படத்தில் பாயாசம் போடும் பாட்டியாக லூட்டி அடித்திருப்பார். இந்தக் காமெடி தேனி குஞ்சரம்மாவிற்கு பெரும் புகழைக் கொடுக்க தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அருள் படத்தில் இடம்பெற்ற உக்கடத்து பம்பரமே பாடலையும் பாடியிருப்பார்.

அதன்பின் வயோதிகத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2008-ல் உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் இன்றும் பல இடங்களில் அவரது தனித்துவமான குரலால் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Published by
John

Recent Posts