பொழுதுபோக்கு

“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட”..ன்னு கேட்டாலே ஞாபகம் வர்ற நடிகை.. 21 வயதில் வாழ்க்கை முடிந்த பின் வெளியான அவரது கடைசி திரைப்படம்..

தமிழ் சினிமாவில் கலக்கிய கேரள நடிகைகள் பட்டியல் ஒன்றை போட்டால் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு கேரள மண்ணில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்து தங்களுக்கென ஒரு அரியணையை உருவாக்கிக் கொண்டார்கள். இந்த பட்டியலில் பத்மினி, அம்பிகா, ராதா, ஊர்வசி, சோபனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் என அந்த காலத்து நடிகைகள் தொடங்கி இந்த காலத்து நடிகைகள் வரை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

அந்த வகையில், மலையாள சினிமாவில் இருந்து வந்து சாதித்த முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்க வேண்டியவர் மோனிஷா உன்னி. கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மோனிஷா உன்னி, தனது 16 வது வயதில் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

இதற்கடுத்து ஒரு சில மலையாள படங்களில் நடித்த மோனிஷா உன்னிக்கு ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. டி. ராஜேந்தர் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் மோனிஷா உன்னிக்கு கிடைத்தது.

அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் மோனிஷாவை இன்னும் பக்கத்தில் கொண்டு போய் சேர்த்தது என்றால் அது ‘உன்னை நினைச்சேன், பாட்டு படிச்சேன்’ என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். இதில் வரும் ‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி’ என்ற பாடல், இன்றளவிலும் பலரின் மனம் கவர்ந்த பாடலாகும். இதில் வரும் மோனிஷா உன்னியின் முகம் எத்தனை காலங்கள் கழிந்தாலும் மறக்க முடியாது.

இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மோனிஷா, நிச்சயம் தென் இந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் பல காலத்திற்கும் அவரது பெயர் நிலைத்து நிற்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மோனிஷா கூட கனவில் நினைக்காத ஒரு சம்பவம் அரங்கேறியது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, தனது தாயுடன் ஆலப்புழா அருகே காரில் அவர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் மோனிஷா உன்னி பரிதாபமாக உயிரிழக்க, அவரது தாயார் சில காயங்களுடன் உயிர் தப்பினார்.

16 வயதில் சினிமாவில் நடித்து தேசிய விருது வென்ற மோனிஷா உன்னியின் வாழ்க்கை வெறும் 21 வயதில் முடிந்து விட்டது. மோனிஷா உன்னி நடித்த படங்களை இப்போது பார்க்கும் பலருக்கும் அவர் ஏன் இவ்வளவு சீக்கிரம் இறந்து போனார் என கலங்கும் அளவிலான கதாபாத்திரங்களை சிறு காலகட்டத்திலேயே செய்து விட்டு மறைந்தும் விட்டார் மோனிஷா உன்னி. அதே போல, மோனிஷா உன்னி மறைந்து ஏறக்குறைய 9 மாதங்கள் கழித்து மணிவண்ணன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘மூன்றாவது கண்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts