தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு.. இன்னொரு கனமழையை சந்திக்க தயாரா?

வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதை அடுத்து தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலும் தற்போது வங்க கடலில் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள திரிகோணமலையிலிருந்து 445 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருப்பதாகவும் இந்த காற்றழுத்து தாழ்வு 13 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திரிகோணமலைக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசைக்கு திரும்பி நாளை இலங்கை கடற்கரையை நோக்கி கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தை ஒட்டிய இலங்கை கடற்கரையில் இந்த காற்றழுத்த தாழ்வு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை இலங்கை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கை மற்றும் கடலோர பகுதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் தமிழகம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை எண்ணூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Bala S

Recent Posts