இயக்குநர் சேரன் தந்தை மறைவு : திரையுலகினர் இரங்கல்

மனித உணர்வுகளைப் படமாக்குவதில் இப்போதுள்ள இயக்குநர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் சேரன். மதுரை மேலூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து பின்பு சினிமா மீது உள்ள மோகம் காரணமாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவருடன் புரியாத புதிர் முதல் நாட்டாமை திரைப்படம் வரை தொடர்ந்து பணியாற்றினார்.

பின்பு உலகநாயகனுடன் மகாநதி படத்தில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல்படமே சாதி பிரச்சினையை உருவாக்க அந்த சர்ச்சையே படத்தை வெற்றி படமாக்கியது. அதன்பின் பொற்காலம் படத்தை எடுத்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியலைப் பதிவு செய்திருந்தார். மேலும் வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி ஆகிய படங்களை இயக்கிய பின் இயக்குநர் தங்கர் பச்சானின் சொல்ல மறந்த கதை படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

அதன்பின் ஆட்டோகிராப் படத்தை இவரே ஹீரோவாகி இயக்க படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் சில படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். மனித உணர்வுகளை, வாழ்வியல் முறைகளை படம்பிடித்துக் காட்டுவதில் சேரன் திறமையானவர்.

தற்போது சேரன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 84 வயதாகும் சேரனின் தந்தை வயது முதிர்வு காரணமாக சமீப நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார். இதனால் இன்று (நவ.16) அவரது உயிர் பிரிந்துள்ளது.

29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!

சேரனின் தந்தை சினிமா தியேட்டரில் ஆப்ரேட்டராக பணிபுரிந்துள்ளார். தனது சொந்த ஊரான மதுரை மேலூர் அருகே உள்ள பழையூரில் வசித்து வந்த அவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் சேரனுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தவமாய் தவமிருந்து படத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்து தந்தை தனது பிள்ளைகளை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார் என்பதை காட்டியிருப்பார். ராஜ்கிரண் அப்பாவாக நடித்த அந்தப் படம் தந்தையின் பெருமைகளைச் சொல்லும் உணர்வுப்பூர்வ படமாக இருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சேரன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews