இயக்குனர் பாலு மகேந்திரா நினைவு தினம் இன்று

தமிழில் சிறப்பான படங்களை இயக்கி தமிழில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றவர் இயக்குனர் பாலு மகேந்திரா.


ஆரம்ப காலங்களில் ஒளிப்பதிவாளராக மட்டும் சில படங்களில் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதில் இவருக்கு நிகர் இவரே அவ்வளவு பசுமையாகவும் அழகாகவும் தனது கேமராவுக்குள் கொண்டு வருவார் பாலு மகேந்திரா. வண்ண வண்ண பூக்கள் படத்தில் இள நெஞ்சே வா, பாடலும் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தின் மலரே மலரே உல்லாசம், கண்ணில் என்ன கார்காலம் போன்ற பாடல்களை பார்த்தால் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு திறமையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

கன்னடத்தின் கோகிலா படத்தின் மூலமும் தமிழில் அழியாத கோலங்கள் படத்தின் மூலம் அறிமுகமான பாலு மகேந்திராவின் படங்கள் அனைத்தும் இன்று வரை அழியாத கோலங்களேயாகும்.

வீடு, சந்தியா ராகம் படங்களில் உணர்வுகளை அதிகம் சொல்லி அந்த படங்களை காவியமாக்கி இருப்பார். அதிலும் வயதான பெரியவர் சொக்கலிங்க பாகவதரை ஹீரோவாக்கி ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் மனிதன் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கடைசியில் அந்த வீட்டுக்குள் அவன் செல்ல முடிந்ததா என்பதை ஆழமாகவும் நம்மை அழவைத்தும் படமாக்கி இருந்தவர் பாலு மகேந்திரா.

அது போல இவர் இயக்கிய ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் இவரின் படங்களில் இருந்து மாறுபட்ட நகைச்சுவை படங்கள் ஆகும்.

உன் கண்ணில் நீர் வழிந்தால், நீங்கள் கேட்டவை போன்ற படங்கள் இவரின் வழக்கமான படங்களில் இருந்து அவரது ஸ்டைலுடன் கூடிய ஆக்சன் படங்களாக வந்தவை.

மூன்றாம் பிறை என்ற மாபெரும் திரைப்படத்தை கொடுத்தவர் அதற்கு தேசிய விருதும் பெற்றவர். முதல் படம் தவிர கடைசிவரை இசைஞானி இளையராஜாவுடன் மட்டுமே இணைந்து தன் படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.

அவரின் நினைவு தினம் இன்று.

Published by
Staff

Recent Posts