உண்மையை மறைத்த சிவாஜி.. காமெடி நடிகை டிபி முத்துலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம்..

நாகேஷ், கலைவாணர், எம். ஆர். ராதா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்கள் பெயரை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் காமெடி நடிகைகள் சற்று குறைவாகவே இருந்தனர். அப்படி அரிதாக காமெடியில் கொடி கட்டிப்பறந்த நடிகைகளில் ஒருவர் தான் டிபி முத்துலட்சுமி. தங்கவேலுடன் இணைந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முத்துலட்சுமியின் காமெடியில் குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்த அறிவாளி என்ற திரைப்படத்தில் பூரி எப்படி சுட வேண்டும் என்று தங்கவேலு சொல்லி கொடுப்பார். அப்போது தங்கவேலு சொல்ல சொல்ல, அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே என்று திரும்பத் திரும்ப டிபி முத்துலட்சுமி கூறுவார். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தங்கவேலு கேட்க, அதுதாங்க தெரியாது என்று அப்பாவியாக கூறுவார். இந்த காமெடி இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது வயிறு வலிக்க சிரிக்கும் வகையில் இருக்கும்.

நடிகை டிபி முத்துலட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். 1948 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த டிபி முத்துலட்சுமி குடும்பம், அவரது கலை ஆர்வத்தை பார்த்து நடனம், நாட்டியம் ஆகியவற்றில் பயிற்சி கொடுத்தனர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டிபி முத்துலட்சுமி, பாட்டு, நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பெற்றோரிடம் கூறினார். முதலில் பெற்றோர்கள் தயங்கினாலும் அதன் பிறகு டிபி முத்துலட்சுமி உறுதியுடன் இருந்ததை அடுத்து ஒரு சினிமா கம்பெனியில் சேர்த்து விட்டனர்.

அந்த நேரத்தில் ஜெமினி எஸ்எஸ் வாசன் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்து வந்த நிலையில் அந்த படத்தில் டிபி முத்துலட்சுமி டிரம்ஸ் வாசிக்கும் ஏராளமான பெண்களில் ஒருவராக நடித்தார். மேலும் அந்த படத்தில் நடனமாடியதோடு டிஆர் ராஜகுமாரி ஒரு சில காட்சிகளில் டூப்பாகவும் நடித்தார்.

அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்தார். பராசக்தி, திரும்பி பார், கூண்டுக்கிளி, பொன்வயல், கணவனே கண்கண்ட தெய்வம், கோமதியின் காதலன், பாசவலை, அறிவாளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பொன்முடி என்ற படம் தான் அவருக்கு நகைச்சுவை நடிப்பில் திருப்புமுனை கொடுத்தது.

தங்கவேலுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் டிபி முத்துலட்சுமி கூறிய போது தங்கவேலு அவர்களுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன், அவர் மிகவும் திறமையான நடிகர், மிகச்சிறந்த நடிகர் அவர்தான். பந்தா இல்லாதவர், நெகட்டிவாக எந்த வார்த்தையையும் அவர் திரைப்படத்தில் வசனமாக உச்சரிக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

டவுன் பஸ் என்ற திரைப்படத்தில் டிபி முத்துலட்சுமி மற்றும் அஞ்சலிதேவி ஆகிய இருவரும் பஸ் கண்டக்டராக நடித்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுடன் டிபி முத்துலட்சுமி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு தந்தி வந்தது. தந்தி ஆங்கிலத்தில் இருந்ததால் அதை தனக்கு படிக்க தெரியாது என்பதால் சிவாஜி கணேசனிடம் கொடுத்து படிக்க சொன்னார். அவர் அதை படித்த போது அரியலூர் ரயில் விபத்தில் டிபி முத்துலட்சுமி தாயார் இறந்து விட்டதாக எழுதி இருந்தது. ஆனால் அதைச் சொன்னால் டிபி முத்துலட்சுமி அதிர்ச்சி அடைவார் என்று உனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உடனே புறப்படு என்று கூறி அவரே தன்னுடைய காரை கொடுத்து அனுப்பினார். இந்த சம்பவத்தை டிபி முத்துலட்சுமி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

350 படங்கள் வரை நடித்துள்ள முத்துலட்சுமியின் கணவர் முத்துராமலிங்கம் அரசு நிறுவனத்தில் பணியாற்றியவர். இவருடைய நெருங்கிய உறவினர் தான் நடிகர் மற்றும் இயக்குனர் டிபி கஜேந்திரன். கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிபி முத்துலட்சுமி ஒரு சில நாட்களில் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது அப்பாவி தனமான காமெடி காட்சிகள் என்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கும்.

Published by
Bala S

Recent Posts