குளுக்கோசுக்கு முன்னோடி நம் பானகம்


உணவு எதுவும் உண்ணாமல் காவடி எடுத்தல், அலகு குத்துதல் என கடுமையான விரதமிருப்போருக்கு உடனடி ஆற்றல் கொடுக்க பானகத்தினை நைவேத்தியமாய் படைத்து தருவது நமது முன்னோர் வழக்கம். உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை கொடுத்து, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ இன்றும் பக்தர்களுக்கு பானகத்தினை தானமாய் கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் நாம்தான் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் என பழையதை மறந்து புது உணவுகளை இந்த கோடையில் தேடி செல்கிறோம்.

மருந்துகளை சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகி அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். மருந்து செயல்பட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, ‘பானக கல்பனா’ என்று சொல்லப்படுகிறது. ‘கல்பனா’ என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 2

வெல்லம் – ருசிக்கேற்ப

சுக்கு – சிறிது

ஏலக்காய்- இரண்டு

தண்ணீர் – தேவையான அளவு

எலுமிச்சையை பிழிந்து, அதனுடன் வெல்லத்தினை கலந்து வடிகட்டி அதனுடன், சுக்கு, ஏலக்காய் பொடி போட்டு விருப்பப்பட்டால் சிறிது மிளகு, புதினா இலைகளை சேர்த்து பரிமாறலாம். சுக்கு செரிமானத்தை தூண்டும். மிளகு சளி பிடிப்பதை தடுக்கும். வெல்லம் இரும்புசத்தினை கொடுக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி இருக்கு. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானத்தினை கொடுக்காமல் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் ஆரோக்கிய பானத்தினை கொடுக்க ஆரம்பிப்போம்.

Published by
Staff

Recent Posts