ராமன் புகழ்பாடும் ராமாயணம்



விஷ்ணுபகவான் தீயவற்றை அழிக்க பல அவதாரம் எடுத்தார். அதில் மனிதனாய் அவதரித்ததுதான் ராம அவதாரம். ராமனின் வரலாற்றினை வால்மீகி என்பவர் சமஸ்கிருதத்தில் ராமயணமாய் எழுதினார். கி.மு 2 நூற்றாண்டுக்கும், 5 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கு. இதை கம்பர் தமிழில் மொழிப்பெயர்த்தார். வெவ்வேறு ஆட்களால் அவரவர் பார்வையில் எழுதப்பட்ட வகையில் ராமாயணத்தில் மொத்தம் 300 வகைகள் இருக்கின்றது. ராமாயணத்தை மொத்தம் 7 காண்டங்களாக வால்மீகி பிரித்து எழுதியுள்ளார்.

ஏழு காண்டங்கள் எவைன்னு பார்க்கலாம்!!


 பால காண்டம்:  

ராம, லக்ஷ்மண, பரத சத்ருக்னர்களின் பிறப்பு, ராம, லக்ஷ்மணர் விஸ்வாமித்திர முனிவருடன் காட்டுக்குச் சென்று அங்கே தாடகை என்ற அரக்கியைக் கொன்று முனிவர்கள் தடையின்றி வேள்வி செய்ய வழி வகுத்தல், விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணம் புரிதல் ஆகிய சம்பவங்கள் இந்தக் காண்டத்தில் இடம் பெறுகின்றன.


2) அயோத்யா காண்டம்: 


சீதையை மணமுடித்து ராமர் அயோத்திக்குத் திரும்புதல், ராமருக்குப் பட்டம் சூட்ட தசரதன் முனையும்போது அவரது மூன்றாவது மனைவி கைகேயி, தசரதன் தனக்கு முன்பு அளித்திருந்த வாக்குறுதியைப் பயன்படுத்தி, தன் மகன் பரதன் அரசாள வேண்டும், ராமன் 14 வருடங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற இரு வரங்களக் கேட்டுப் பெறுதல், ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் காட்டுக்குக் கிளம்புதல் ஆகிய சம்பவங்கள் இதில் அடங்கும்.


3) ஆரண்ய காண்டம்: 


ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகிய மூவரும் காட்டுக்குச் செல்லுதல், ராமனின் பிரிவினால் தசரதன் உயிர் துறத்தல், தாய்மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதன் அயோத்தி வந்து தாயைக் கடிந்து கொண்டு, ராமரைத் தேடிக் கானகம் செல்லுதல், கானகத்தில் ராமர் வேட்டுவக் குலத் தலைவன் குகனைச் சந்தித்து அவனுடன் நட்புப் பேணுதல், தன்னைத் தேடிக் காட்டுக்கு வந்த பரதன் மூலம் தந்தை இறந்த`செய்தி கேட்டு ராமன் வருந்துதல், பரதனையே அரசாளப் பணித்து அவன் கேட்டுக்கொண்டபடி தன் காலணிகளை அவனிடம் கொடுத்தல், ராமர் லக்ஷ்மணர் சீதை ஆகியோரின் கானக வாழ்க்கை, அரக்கர்களை அழித்தல், முனிவர்களைச் சந்தித்தல், ராவணன் வஞ்சகமாகச் சீதையைக் கவர்ந்து செல்லுதல் ஆகிய செய்திகள் ஆரண்ய காண்டத்தில் அடங்கும்.

4) கிஷ்கிந்தா காண்டம்: 


சீதையைத் தேடி ராம, லக்ஷ்மணர்கள் காட்டில் திரியும்போது வானர அரசன் சுக்ரீவனின் மந்திரியாகிய ஹனுமானைச் சந்தித்தல், அனுமன் மூலம் சுக்ரீவன் அறிமுகம் ஆதல், சீதையைத் தேட உதவுவதாக சுக்ரீவன் வாக்களித்தல், சுக்ரீவன் கேட்டுக்கொண்டபடி அவன் மீது பகை கொண்டிருந்த அவனது மூத்த சகோதரன் வாலியை ராமர் வதம் செய்தல், சீதையைத் தேடி வானரர்கள் பல திசைகளுக்கும் பயணம் செய்தல் ஆகிய சம்பவங்களை உள்ளடக்கியது கிஷ்கிந்தா காண்டம். கிஷ்கிந்தை என்பது சுக்ரீவன் ஆண்ட நாட்டின் பெயர். அதனால் இந்தக் காண்டத்துக்கு இந்தப் பெயர்.

5) சுந்தர காண்டம்: 


ஹனுமான் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லுதல், அங்கே அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமர் வந்து அவரை மீட்பார் என்று ஆறுதல் கூறித் திரும்புதல், ராவணனின் படை வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டு ராவணன் அவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராமரின் தூதர் என்று தெரிந்ததும் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான், அந்தத் தீயினால் இலங்கைக்கே தீ வைத்து விட்டு ராமரிடம் திரும்புதல், சீதையைக் கண்ட விவரங்களை ராமரிடம் எடுத்துரைத்தல் ஆகிய செய்திகளைச் சொல்வது சுந்தர காண்டம்.

6. யுத்த காண்டம்: 


வானரப் படைகளுடன் ராமர் இலங்கைக்குச் சென்று ராவணனைப் போரில் வென்று சீதையை மீட்டு, அயோத்தி சென்று அரசராகப் பட்டாபிஷேகம் செய்து கொள்வதை விவரிப்பது யுத்த காண்டம்.

7. உத்தர காண்டம்: 


ராமரின் அரசாட்சி, சீதை மீது அவச்சொல் எழுந்ததைத்  தொடர்ந்து சீதையைக் காட்டுக்கு அனுப்புதல், காட்டில் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி சீதை லவ குசர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வால்மீகியிடம் ராமாயணம் கற்று லவ குசர்கள் ராமாயணக் கதையை எங்கும் பரப்புதல், அஸ்வமேகம் செய்த ராமருடன் லவகுசர்கள் போரிடுதல், சீதை வெளிப்பட்டு ராமரிடம் அவருடைய புதல்வர்களை ஒப்படைத்து விட்டு பூமிக்குள் மறைதல், ராமரும் ஆட்சியைப் புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டு சரயு நதியில் இறங்கித் தம் அவதாரத்தை முடித்துக் கொள்ளுதல் ஆகிய செய்திகள் இதில் சொல்லப் படுகின்றன.

ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு என சிறப்பான இடம் உண்டு. சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் (பாராயணம் செய்வது என்றால் மனம் ஒன்றிப் படிப்பது என்று பொருள்.) நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம் நாட்டில் பாரம்பரியமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. சுந்தர காண்டத்தைப் படிப்பது ராமாயணம் முழுவதையும் படிப்பதற்குச் சமம்.

வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதால் மனத் தெளிவும், அமைதியும் ஏற்படும். வால்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய சுலோகங்களைப் படிப்பதுதான் பாராயண முறை. சம்ஸ்கிருத எழுத்துக்களைப் படிக்க இயலாதவர்கள் சுலோகங்களின் தமிழ் எழுத்து வடிவங்களைப் படிக்கலாம். எங்கெல்லாம் ராமாயணம் படிக்க/சொல்ல/கேட்க/எழுதப்படுகிறதோ அங்கெல்லாம் தலைக்குமீது உயர்த்திய கைகளை கூப்பியவாறு கண்ணில் நீர்வழிய அனுமனும் அமர்ந்திருப்பதாய் நம்பிக்கை

ராம ஜெயம்!!

Published by
Staff

Recent Posts