பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்

பக்தர்களின் பாவத்தை போக்க பல கோவில்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இந்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாகும். இங்கு பில்லி,ஏவல், சூனியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து நலம்பெற்று திரும்பி செல்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் உலக பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாய் தோன்றியவள். இவளை புற்றுதேவி, அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி என பல பெயர்களால் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

அங்காள பரமேஸ்வரி அவதரித்தது எப்படி..

தேவர்களை துன்புறுத்தி வந்த அரக்கர்களான சண்டோபி மற்றும் சுந்தரர் ஆகியோரை அழிக்க பிரம்மா யாகம் செய்தார். யாகத்திலிருந்து அப்ஸராக்களும், திலோத்தமையும் வெளிவந்தனர். திலோத்தமை பார்வதி அவதாரம். அவள் அழகில் மயங்கிய பிரம்மா அவளை அடைய எண்ணி பின்தொடர்ந்து கைலாசம் வரை சென்றார். பிரம்மாவிற்கு சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகள் உண்டு. தன்னை பின் தொடர்ந்து வந்தது சிவபெருமான் என நினைத்த திலோத்தமை இருட்டில் வந்து கொண்டிருந்த பிரம்மனை சிவன் என எண்ணி தன் கணவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது காலில் விழுந்து வணங்கினாள்.


வணங்கி எழுந்த பின்னர்தான் தான் ஏமாந்தது தெரியவர சிவபெருமானிடம் நடந்ததை கூறினாள். கோபங்கொண்ட சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. கைகளை உதற உதற மீண்டும் மீண்டும் சிவன் கையிலேயே வந்து ஒட்டிக்கொண்டது அத்தலை. இதுப்போல 99 முறை நடந்தது. சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள் என்று பார்வதி சொன்னாள். சிவன் அவ்வாறே செய்ய அத்தலை கபாலமாக மாறியது. ஏற்கனவே கணவனின் தலை கொய்யப்பட்ட கோவத்திலிருந்த சரஸ்வதி, பிரம்மனின் தலை கபாலமாக மாற யோசனை சொன்ன பார்வதிமீது கோபம் கொண்டு   பூலோகத்தில் பிறந்து அலைந்து திரிவாயாக!என சாபமிட்டாள்.  சிவனின் உணவை அக்கபாலமே உண்டதால் சிவன் பிட்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். அக்கபாலத்தையே திருவோடாக்கி பிட்சாடனர் கோலம் கொண்டு பிட்சை எடுத்து உலகை வலம் வந்தார். கொடிய உருவத்துடன் இருந்த பார்வதிதேவி மலையனூரில் இருக்கும் ஒரு புற்றினுள் புகுந்து பாம்பு ரூபம் கொண்டு சிவனை நினைத்து தவமிருந்தாள். பிட்சாடணர் வேடம் கொண்ட சிவனும் எங்கெங்கோ சுற்றி மேல்மலையனூர் வந்து சேர்ந்தார்.

பாம்பு உருக்கொண்டிருந்த பார்வதிதேவியிடம் பிட்சை கேட்டார் சிவன். சுவைமிகுந்த உணவை தயார் செய்து சிவனுக்கு பிட்சையிட்டாள் தேவி. ஓரிரு முறை அன்னை இட்ட உணவை கபாலம் ருசித்தது. மூன்றாவது முறை வேண்டுமென்றே உணவை தவறவிட்டாள் தேவி. உணவின் ருசியால் கவரப்பட்ட கபாலம் உணவை உண்ணும் ஆவலில் சிவனின் கையை விட்டு அகன்றது. கையிலிருந்த உணவை வான் நோக்கி வீசிவிட்டு தேவி விஸ்வரூபமெடுத்து கபாலத்தை மீண்டும் வராதவாறு பூமியிலேயே போட்டு அழுத்திவிட்டாள். அத்தோடு இருவரின் சாபமும் அகன்றது. இதைத்தான் மயானக்கொள்ளை விழாவாக மாசிமாதத்தில் கொண்டாடுகின்றனர்.


இதற்கிடையில் வல்லாளகண்டனின் துன்பம் தாளாமல் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்க தேவி அங்காளபரமேஸ்வரியாய் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அவளால் உங்கள் துன்பம் தீருமென அருளினார்.  சிவனின் தோஷத்தை போக்கிய தேவிமீது கோபம் அதிகரித்த சரஸ்வதி தேவி.. சிவனின் சாபத்தை போக்கியவளே! மயானபூமிதான் உன் இருப்பிடம். , மயானக்கரிதான் உன் அலங்காரம், மயானத்தில் எரியும் பிணங்களே உனது உணவென சாபமிட்டாள். சாபம் பெற்ற தேவி மூன்று கண்களும், எடுப்பான பல்லும், இருண்ட மேனியோடு சுற்றியளைந்தாள்.

வல்லாள கண்டன் முன்னொரு முறை கைலாயத்தில் பார்வதிதேவியை கண்டு மோகமுற்றிருந்தான். அந்த மோகம் தணியாமல் இருந்த வல்லாள கண்டன், பார்வதிதேவி சிவனை பிரிந்து மேல்மலையனூரில் காளியாய் பிறந்திருப்பதை அறிந்து சிவன் ரூபங்கொண்டு அன்னையை நெருங்கினான். அன்னை கோபங்கொண்டு விஸ்வரூபமெடுத்து சங்கு, வாள்,அம்பு, வில்,  வீச்சறிவாள், சூலம், கேடயம், கத்தி, பிரம்பு, கபாலம் ஆகியவற்றை கைக்கொன்றாய் ஏந்தி வல்லாள கண்டனோடு போரிட்டாள்.  ஒருக்கட்டத்தில் அத்தனை ஆயுதத்தை வீசியெறிந்து தன் கூரிய நகத்தால் அவன் குடலை கிழித்து மாலையாய் அணிந்து கொண்டு அவன் ரத்தத்தை உறிஞ்சி குடித்து அவனை சம்ஹாரம் செய்தாள். தங்கள் துன்பத்தை போக்கிய அன்னையினை பூமாரி பொழிந்து சாந்தப்படுத்தினர்.


சிவபெருமான், தேவி! எனது பிரம்மஹத்தி தோஷம் போக்க முயன்று சாபம் பெற்று கொடூர உருவமாய் மாறிய உன் உடலெங்கும் நான் லிங்க ரூபமாய் வீற்றிருப்பேன். எங்கள் துயர் தீர்த்த நீ இங்கேயே அங்காள பரமேஸ்வரி எனப்பெயர்கொண்டு உன்னை நாடி வரும் பக்தர்களை வாட்டும் தீயசக்திகளை விரட்டி அவர்களை நலமோடு வாழவைக்க வேண்டுமென அருளினார். அவ்வாறே, அம்பாள் அங்கிருக்கும் ஏரிக்கரையின்மீது கோவில் கொண்டு பக்தர்களின் துயரினை போக்கி வந்தாள்.

ஒருசமயம் கடும் மழைக்காலத்தில் அந்த ஏரி நிரம்பி உடைப்பெடுத்து ஊரே அடித்து செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏரிக்கரையில் வசிக்கும் செம்பட இனத்தவர் அம்மனை வேண்ட, அன்னை விஸ்வரூபமெடுத்து ஏரிக்கரையில் படுத்து ஏரி தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுத்து காத்தாள். பெரிய+ஆயி=பெரியாயியாய் திறந்தவெளியில் கோவிலுக்கு வெளியில் படுத்து அருள்புரியும் அன்னைக்கு சேலை சாற்றுவது நல்ல பலனை தரும். தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, அதைவிட இரண்டு மடங்கு தேன், வாழைப்பழத்தைவிட மூன்று மடங்கு பசும்பால் கொண்டு தயாரிக்கப்படும் திரிகடுகம்தான் இங்கு நைவேத்தியம்.  இளநீர், மாவிலக்கு, பொங்கல், பானகமும் இங்கு படைக்கப்படுது. உயிர்பலி இங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று.

பார்வதிதேவி இக்கோவிலில் உள்ள புற்றில் பாம்பாக இன்றும் உள்ளதாக பக்தர்களால் நம்பப்படுவதால் கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபடுகின்றனர். புற்று மண்ணே இங்கு பிரசாதமாய் தரப்படுகிறது. இங்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அமாவாச, பௌர்ணமி தினங்களில் இங்கு தங்கினால் பேய், காத்து, கருப்பினால் பாதிக்கப்பட்டோரும், மனநிலை பாதிக்கப்பட்டோரும் குணமடைவர். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு கருவறையில் இருக்கும் புற்றுக்கு ஒரு மண்டலம் பால் ஊத்தி வந்தால் திருமணம் கைக்கூடும். கருவறைக்கு அருகில் சிறு குன்றளவு புத்து உள்ளது. நாகர்கோவில் நாகராஜன் கோவில் போல இங்கும் இந்த புற்று மண்தான் பிரசாதம்.  அமாவாசை அன்று இக்கோவிலில் அம்மன் ஊஞ்சலாட்டு நடக்கும். எல்லா அம்மன் கோவில்களிலும் ஓம் சக்தி பராசக்தின்னுதான் கோஷமிடுவாங்க.இந்த கோவிலில் மட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தாவென கோஷமிடுவர். .

அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங் களிலும் ஆலயங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முன்னோடி இந்த மேல்மலையனூர் ஆலயமாகும். திண்டிவனத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேல்மலையனூர் உள்ளது. சேத்பட், ஆரணி, வேலூர், செஞ்சியில் இருந்து நேரடியாக பேருந்து வசதி உள்ளது.

அங்காளம்மனை தொழுது தீய சக்திகள் அண்டாதிருப்போம்…

ஓம் சக்தி!! பராசக்தி!!

Published by
Staff

Recent Posts