நீண்ட இடைவேளைக்குப் பிறகு கம்பேக் கொடுக்கப் போகும் பரத்…

2003 ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத் . இவர் ஒரு நடன கலைஞரும் ஆவார். அடுத்ததாக இவர் ஹீரோவாக நடித்த ‘காதல்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம்டன்- மகன்’, ‘கண்டேன் காதலை’ ஆகியவை இவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கப் படங்களாகும். அதன் பின்பு சரிவர படங்கள் கைகொடுக்காததால் சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம். பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பி. ஜி. எஸ். ப்ரொடெக்ஷன்ஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’. இத்திரைப்படம் ஹைபெர் லூப் திரில்லராக, வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பரத் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஷான் மற்றும் ராஜாஜி உடன் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் பிரசாத் முருகன் கூறுகையில், நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும் அவர்களை அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கமர்ஷியல் கலந்து சொல்லி இருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம் என்று கூறினார்.

நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வசனம் மற்றும் பாடல்களை ஜெகன் எழுதியுள்ளார். ‘ராட்சசன்’ படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...