பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம் – ரகுமான்!

சினிமாவில் தோற்றம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஹீரோயின் மட்டுமல்ல, ஹீரோவும் அழகாக இருந்தால் கூடுதல் போனஸ். நடிகர்கள் மாநிறமாக இருந்தாலும், ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்ப்பார்ப்பு எல்லா கால கட்டத்திலும் இருந்து வருகிறது.

அது மாறாத ஒன்றாக இருப்பினும் தோற்றம் எப்படி இருந்தாலும், நடிப்புத்திறன் இருந்தால் மட்டுமே நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியும் என்பதை பல நடிகர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் மாறி இருக்குற, சினிமால போய் சேர்ந்துடு என்று கலராக இருப்பவரை பார்த்து மற்றவர்கள் சொல்வதை பாத்திருப்போம். வெள்ளை தோற்றம் கொண்ட எம்.ஜி.ஆர், சரத்பாபு, அர்ஜூன், அரவிந்த் சாமி, பிரஷாந்த், அஜித் போன்றவர்கள் மக்களால் வெகுவாக கொண்டாடப்பட்டவர்கள்.

அஜித் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது, வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிற இந்த பையனுக்கு தமிழ் சினிமா ஒத்து வராது என்றுதான் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், அவரோ இன்று ‘தல’ எனக் கொண்டாடப்படும் பட்டத்தை அடைந்திருக்கிறார். ஆனால், எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தோற்றத்தில் இப்போது இருக்கும் ஹீரோக்களுக்கும் டஃப் கொடுக்கக்கூடியவர் ரகுமான்.

ஊட்டியில் படித்துக் கொண்டிருந்தபோது, மலையாள இயக்குனர் பத்மராஜன் தன்னுடைய படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். 16 வயதான ரகுமானும் நடித்து கேரளவின் சிறந்த நடிக்கருக்கான விருதினை பெற்றிருக்கிறார். மலையாளத்தில் வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல மார்க்கெட்டை பெற்ற ரகுமான் தமிழ் மற்றும் தெலுங்கிலும் கவனம் செலுத்தினார்.

ரகுமானின் முதல் தமிழ்ப்படம் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நிலவே மலரே’. மீண்டும் எஸ்.ஏ.சியுடன் இணைந்து ‘வசந்த ராகம்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரனுடன் அப்போது சிறுவனாக இருந்த விஜய்யும் நடித்திருப்பார்.

பிறகு கே.பாலசந்தரின் ‘புதுப்புது அர்த்தங்களில்’ ரகுமான் நடித்திருப்பார். கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான ‘புரியாத புதிரில்’ நடித்திருப்பார். இப்படி பலருடன் நடித்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் அவருக்கு படங்களே தமிழில் இல்லாமல் போனது. ‘சங்கமம்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன. படம் சுமாராகவே ஓடியது.

இதற்கு இடையில் நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இருப்பினும் ‘ராம்’ படத்தில் கிடைத்த வரவேற்பு மீண்டும் கிடைத்தது 2014ல் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தான். தற்போது ‘பொன்னியின் செல்வனில்’ மதுராந்தகன் ஆக நடித்திருந்தார். இவருக்கு ஏ.ஆர்.ரகுமானால் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது என்னவென்றால், ரகுமானும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரே வீட்டுப் பெண்களை திருமணம் செய்துள்ளனர். இதனால் தன்னை படத்தில் புக் செய்ய வரும் இயக்குனர்கள் அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க கேட்டுள்ளனர்.

அதற்கு மறுத்த காரணத்தால், பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாக கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய ஒரே படம் ‘சங்கமம்’ தான். தனது மனைவியின் அக்கா கணவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் அதற்காக நான் நடிக்கும் படங்களில் எல்லாம் இசையமைக்க வேண்டும் என்று என்னால் எப்படி தொந்தரவு செய்ய முடியும். அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதில் நான் வற்புறுத்த இயலாது என்று தான் சினிமா துறையில் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
Nithila

Recent Posts