பொழுதுபோக்கு

தனுஷ் – ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. கடைசி நேரத்தில் ஹீரோயின் மாறியது எப்படி?

தமிழ் சினிமாவில் சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தனுஷ். தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் நடிக்க வந்தார் தனுஷ்.

இதன் பின்னர், அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் நாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படம் தனுஷை சினிமா வட்டாரத்தில் பிரபலப்படுத்த, அடுத்தடுத்து சில கமர்சியல் படங்களிலும் தலை காட்டினார் தனுஷ். ஆரம்ப திரைப்படங்களில் நடிப்பில் சற்று மெனக்கெடல் இல்லமால் தனுஷ் தோன்றி இருந்தாலும் அடுத்தடுத்து அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள், தனுஷ் திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்திருந்தது.

அதிலும் குறிப்பாக, வெற்றிமாறன் கூட்டணியில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவின் மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், திரைப்படத்திற்கு திரைப்படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி அசத்தும் தனுஷ், தமிழ் சினிமாவைத் தாண்டி ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், பிரெஞ்சு படம், Avengers இயக்குனர்களின் ஹாலிவுட் படமான The Grey Man என சர்வதேச அளவிலும் தனது நடிப்புத் திறனால் கால்பதிக்க தொடங்கினார் தனுஷ்.

ஒரு சிறந்த இந்திய நடிகராக மட்டுமில்லாமல், சிறந்த பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராகவும் தனுஷ் விளங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, கேப்டன் மில்லர், தனுஷ் நடித்து இயக்கும் இன்னும் பெயரிடப்படாத ‘D50’ என குறிப்பிடப்பட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார். அப்படி இருக்கையில், தனுஷ் நடித்த ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க இருந்தது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனார் இயக்குனர் பாலு மகேந்திரா. அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என விருப்பப்பட்ட பாலு மகேந்திரா, ஒரு பதின்ம வயது இளைஞனுக்கு அவனை விட வயது அதிகமுள்ள பெண் மீது காதல் வரும் வகையில் கதை ஒன்றையும் தயார் செய்து விட்டார்.

முதலில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க பாலு மகேந்திரா திட்டம் போட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் பின்னர் அந்த திட்டத்தை மாற்றிய பாலு மகேந்திரா, தான் இதற்கு முன்பு மம்மூட்டியை வைத்து இயக்கிய மலையாள படமான யாத்ராவை மையப்படுத்தி, தனுஷ் மற்றும் பிரியாமணி ஆகியோரை வைத்து அது ஒரு கனாக்காலம் என்ற திரைப்படத்தையும் இயக்கினார் பாலு மகேந்திரா.

இளம் வயதிலேயே பாலு மகேந்திரா போன்ற ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க தனுஷிற்கு வாய்ப்பு கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உருவாகி பின்னர் அது மாறியதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts