பகவத்கீதையை தெரியும். ராமகீதையை தெரியுமா?!


தாயின் வரத்துக்கும், தந்தையின் சொல்லுக்கும் ஜானகி, லட்சுமணனுடன் கானகம் சென்ற ராமனை அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். அவர் உதிர்த்த அருள்மொழிகளுக்கு ராமகீதை எனப்பெயர் உண்டு. அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உபதேசித்த பொன்மொழிகளுக்கு சற்றும் குறைவில்லாதது இந்த அருள்மொழிகள்..


சிவனுக்குள்ள சுதந்திரம் உலகிலுள்ள எந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்குமாய் இழுத்துச் செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான்.  எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். 

கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது.  பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது.  மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது.சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான்.  கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நல்லவர்களுடன் சேர்ந்தால் மட்டுமே நல்லது கெட்டதை பகுத்தறியும் அறிவு மலரும். அறியாமையை அழிக்கவும், உலகை புரிந்துக்கொள்ளவும் நல்லவர் சேர்க்கையே உதவும் மழைக்குபின் அழுக்கு நீங்கி மலர்கள் புதுப்பொலிவுடன் திகழ்வதுப்போல நல்லவர் சேர்க்கையால் நம் அறிவும் மிளிரும்.

இதுவே ராமன் பரதனுக்கு உபதேசித்த ராமகீதை…

Published by
Staff

Recent Posts