அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!



40 வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் நாளுக்கு நாள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

தரிசனத்தின் 14ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சுமார் 50,000 பக்தர்கள் வரை மட்டுமே கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்று இரண்டு லட்சத்தில் வந்து நிற்கின்றது. அதனால், கோவில் நிர்வாகத்தால் அத்திவரத தரிசனத்தின் நேரத்தில் அவ்வப்போது மாறுதல் ஏற்படுகிறது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள், இளம்பெண்கள், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாவதை மறுப்பதற்கில்லை.

எதிர்பாராத அளவுக்கு கூட்டமென்பதால் சரிவர கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர். கழிப்பிட, மருத்துவ, உணவு, தண்ணீருக்கு மக்கள் தவிப்பதை கண்கூடாக பார்க்க நேரிடுகிறது.


அத்திவரதர் வைபவத்தின் 14ம் நாளான நேற்று நீல நிற பட்டாடை அணிந்து பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனால், முடிந்த அளவுக்கு விடுமுறை நாட்களில் அத்திவரதரை தரிசிக்க செல்வதை தவிர்க்கவும். அதேப்போல் அதிகாலை 3 மணியளவில் வரிசையில் நின்றால் காலை 6 அல்லது 7 மணிக்கு அத்திவரதரை தரிசனம் செய்து வெளியில் வந்துவிடலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றால் இரவு பத்து மணியளவில் பெருமாளை தரிசிக்கலாம். சிலசமயம், முக்கிய பிரமுகர் வரிசை பொதுமக்களுக்காகவும் திறந்து விடப்படும். அதனால், இந்நேரத்தை கணக்கில் கொண்டால் கூட்டத்தில் அதிகம் சிக்காமல் அத்திவரதர் தரிசனம் கிட்டும்.

அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றிலிருந்து நிர்வாக காரணங்களால், ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Published by
Staff

Recent Posts