அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா.. கருணாநிதி முன் தைரியமான பேச்சு.. அஜித்தின் இன்னொரு பக்கம்..!

அஜித் அரசியலுக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும் அரசியலை அவர் கூர்ந்து கவனிக்க தவறுவதில்லை. தமிழக, இந்திய அரசியல் மட்டுமின்றி அவர் உலக அரசியலையும் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பது அவரது நெருக்கமான வட்டாரத்திற்கு மட்டும் தெரியும் உண்மை.

ஆனால்  அவர் நேரடி அரசியலில் என்றுமே ஈடுபட மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை ஜெயலலிதாவே அவரை அரசியலுக்கு அழைத்ததாகவும் அதிமுகவில் முக்கிய பொறுப்பு தருவதாக கூறியதாகவும் தனக்கு பின்னர் நீங்கள் தான் இந்த கட்சியை நடத்த வேண்டும் என்று கூறியதாகவும் கூட ஒரு செய்தி உண்டு. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் பல அதிமுக பிரமுகர்கள் இதுகுறித்து அவ்வப்போது கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அஜித்தின் திருமணத்தின்போது அவர் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தார். அப்போது அவரை சந்தித்து பேசிய ஜெயலலிதா அவருடைய படங்களை பற்றி எல்லாம் வரிசையாக சொல்லி அந்த படங்களை கிட்டத்தட்ட விமர்சனம் செய்ததை பார்த்து அஜித் அசந்து போய்விட்டாராம்.

அதன் பிறகு அஜித் திருமணத்திற்கு வர முடியவில்லை என்றாலும் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வந்திருந்தார். பொதுவாக ஜெயலலிதாவை பார்க்கும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அவரை கையெடுத்து கும்பிடுவது தான் வழக்கம். ஆனால் அஜித் முற்றிலும் மாறாக அவர் ஜெயலலிதாவிடம் கை கொடுக்க கையை நீட்டினார். ஒரு கணம் ஜெயலலிதா திடுக்கிட்டாலும் அதன் பிறகு சிரித்துக்கொண்டே அவருக்கு கை கொடுத்தார்.

அஜீத் மீது எப்போதுமே ஜெயலலிதாவுக்கு ஒரு தனி மரியாதை உண்டு என்பதை ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள். இந்த நிலையில் தான் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு காலமான போது அஜித் பல்கேரியா நாட்டின் படப்பிடிப்பில் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவு கேட்டதும் உடனடியாக அவர் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு வந்தார்.

பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக விமானம் இல்லை என்பதால் சின்ன சின்ன ஊர்களுக்கு மாறி, மாறி அவரு சென்னைக்கு வந்தார். அவர் வருவதற்குள் ஜெயலலிதாவின் இறுதி சடங்குகள் முடிந்து விட்டன. இருப்பினும் விமான நிலையத்திலிருந்து அவர் நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போதுதான் துக்ளக் ஆசிரியர் சோ மறைவு குறித்த தகவலும் அவருக்கு சொல்லப்பட்டது. உடனே அங்கிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்று சோவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வந்து அஞ்சலி செலுத்தியது, அவர் ஜெயலலிதா மீது வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை காட்டியது.

அதேபோல் அஜித்தின் திருமணத்திற்கு வந்த பிரமுகர்களில் ஒருவர் கருணாநிதி. அவரும் அஜித் திருமணத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பலமுறை தெரிவித்துள்ளார்.

ஒருமுறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது பாச தலைவனுக்கு பாராட்டு விழா என்ற விழா நடத்தப்பட்டது. அதில் அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அஜித் பேசும்போது, ‘அரசியல் விழாவுக்கு நடிகர்கள் வரவேண்டும் என்று கட்டாய்படுத்துகிறார்கள், அதை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்க வேண்டும்’ என்று மேடையிலேயே பேசினார்.

அவரது பேச்சைக் கேட்டு திரை உலக பிரபலங்கள் அதிர்ந்தனர். ஆனால் ரஜினி மட்டுமே எழுந்து நின்று கை தட்டினார். இதன் பிறகுதான் அந்த விழாவுக்கு பல நடிகர், நடிகைகள் வற்புறுத்தலால் வரவழைக்கப்பட்டனர் என்று தெரிந்தது. மறுநாள் முதலமைச்சர் கருணாநிதி அழைப்பதாக அஜித்துக்கு தகவல் வந்தது. அவர் கோபாலபுரம் வீடு சென்று கருணாநிதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அஜித் மேடையில் பேசியது குறித்து அவரிடம் கருணாநிதி கோபப்பட்டிருப்பார் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அஜித் கருணாநிதி இருவரும் அன்புடன் சிரித்துக் கொண்டே பேசிய புகைப்படம் வெளியாகி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ரஜினியின் ஆவேசமான மேடைப்பேச்சால் ஒரு அமைச்சரின் பதவியே பறிபோனது.. என்ன பேசினார்?

ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கருணாநிதிக்கு மிகவும் பாசமானவராகவும் இருந்த அஜித் கடைசி வரை அரசியல் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எனவே நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கி குட்டையை குழப்ப விரும்பவில்லை என்று அவர் கடைசியாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Published by
Bala S

Recent Posts