அப்பாவ அந்த வார்த்தை சொல்லி ட்ரோல் பண்றப்போ.. மேடையில் கலங்கி போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்த நிலையில், ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி செராஃப், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் இது மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, த. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். ஜெய் பீம் போல ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிய திரைப்படத்தை தான் ரஜினியின் வேட்டையன் மூலம் த. ஞானவேல் கொடுப்பார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு மத்தியில், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்த படம், பிப்ரவரி 9 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பாடல்கள் மற்றும் டீசர் மூலம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார். இதனிடையே, சமீபத்தில் நடந்த லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது தந்தை ரஜினிகாந்த் பற்றி உருக்கமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடன் இருப்பதால், அவர் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டு சங்கி என்ற விமர்சனத்தையும் இணையத்தில் பலரும் முன் வைத்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவில், உத்தரபிரதேச முதல்வருடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் ரஜினியின் பெயரும் அதிகம் அடிபட்டிருந்தது.

இது பற்றி தற்போது பேசியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பாவை சமூக வலைத்தளங்களில் நிறைய பேர் சங்கி என கலாய்க்கும் போது அந்த வார்த்தையை பற்றி தெரிந்த பின்னர், அதிகம் கோபமும் வேதனையும் வந்தது. நான் இப்போது தெளிவாக சொல்கிறேன். அவர் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். இந்த படத்தின் அரசியலை புரிந்து கொண்டு தான் நடித்தார்” என தந்தை ரஜினிகாந்தை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
Ajith V

Recent Posts