Time To Lead : 2026 தேர்தலுக்கு ரெடி.. கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.. கூடவே வந்த வேதனையான தகவல்..

கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வரும் அதே சூழலில், இந்த ஆண்டு மே மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களிலும் நடிகர் விஜய் நடித்து வருவதாக தகவல் கூறும் நிலையில் ஒரு டைம் ட்ராவல் கொண்ட திரைப்படமாகவும் இது இருக்கும் என்று தெரிகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகி பாபு, அஜ்மல் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக விஜய் இணைந்துள்ளதால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

திரைப்படங்கள் நடித்து வரும் அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாக நலத்திட்ட பணிகளிலும், தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் விரைவில் அரசியல் களத்தில் குதித்து மக்கள் பணிகளை இன்னும் துரிதமாக அவர் செயல்படுத்துவார் என்றும் தகவல் பரவி வந்தது.

அது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களாக நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் குறித்து சில கருத்துக்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தரப்பிலிருந்து அவரின் கட்சி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு நடிகர் விஜய் பெயரிட்டுள்ள சூழலில், இது தொடர்பாக மிக நீண்ட அறிக்கை ஒன்றையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ள நடிகர் விஜய், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக ஒரு அரசியல் கட்சியைக் குறிப்பிட்டு தான் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள சூழலில், இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் தெளிவாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒப்புக்கொண்டுள்ள கோட் திரைப்படத்தின் பணிகள் முடிந்த பின்னர் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது தான் தற்போது விஜய் ரசிகர்களை சற்று வேதனை அடைய வைத்துள்ளது. கோட் படத்திற்கு பிறகு சில படங்களில் விஜய் நடிப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைய அதிகாரபூர்வ முடிவு ரசிகர்களை சற்று மனம் கலங்க வைத்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts