விளையாட்டு வீரர் to வில்லன் நடிகர்.. மைம் கோபி கடந்து வந்த பாதை

சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் மைம் கோபி. அடிப்படையில் விளையாட்டு வீரரான மைம் கோபியின் குடும்பத்தில் அவரது தந்தை உள்ளிட்டோர் விளையாட்டு மூலமாக ரயில்வே துறையில் பணிபுரிந்தவர்கள். நடிகர் மைம் கோபியும் அதே பாணியில் பயணிக்க கூடுதலாக அவர் ஏற்றுக் கொண்டது மைம் கலை. வசனங்கள் இன்றி வெறும் நடிப்பிலேயே ஒரு கதையைச் சொல்லும் யுக்தியான மைம் கலையைப் பயின்று அதன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

ஒருமுறை இவரின் மைம் கலையைப் பார்த்த மறைந்த எதிர்நீச்சல் நடிகரும், இயக்குநருமான ஜி.மாரிமுத்து தான் இயக்கிய கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் சில படங்களில் நடித்து வந்தவருக்கு பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் புதிய வில்லனாக அவதரித்தார். தொடர்ந்து கபாலி, கதகளி, மாரி, உறியடி எனப் பல படங்களில் நடித்தவர் கடைசியாக கருடன் திரைப்படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார்.

மன்னிப்புக் கேட்ட நாகார்ஜுனா..வயதான ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வருத்தம்..

சினிமாவிலும், பார்ப்பதற்கும் வில்லன் தோற்றம் மைம் கோபியின் இன்னொரு முகம் தான் சமூக சேவைகள் செய்வது. மறைந்த நடிகர்கள் எம்.என்.நம்பியார், ரகுவரன் பாணியில் வில்லத்தனத்தை ரசித்து சினிமாவில் வில்லனாகவே நடிக்க ஆசைப்பட்டு இன்று அதையே சிறப்பாகச் செய்து வருகிறார்.

இயலாதோருக்கு தன்னால் இயன்ற அளவு சேவைகள் செய்து வரும் மைம் கோபிக்கு சிறப்பு குழந்தையாக நடிக்க விருப்பமாம். மேலும் குடிகாரன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் மைம் கோபி சினிமாவில் அதிக சம்பளம் பெற்று பங்களாக்களையும், நிலங்களையும் வாங்கிக் குவிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் ஏழை, எளிய மக்களுக்கும், இயலாதோருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார் மைம் கோபி.

Published by
John

Recent Posts