பொழுதுபோக்கு

நடிகர் ஜெயராமின் ‘ஆபிரஹாம் ஓஸ்லர்’… ஓடிடியில் ரிலீஸ்… எப்போ தெரியுமா…

மலையாள படங்கள் பெரும்பாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . அதன்படி ‘ஆடு’, ‘ஆடு 2’ , ‘அஞ்சாம் பதிரா’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் மலையாள முன்னணி இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ். இவரது இயக்கத்தில் மலையாள முன்னணி நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மலையாள திரைப்படம் ‘ஆபிரஹாம் ஓஸ்லர்’. இது மெடிக்கல் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாகும்.

இப்படத்தில் அனஸ்வர ராஜன், அர்ஜுன் அசோகன், அனூப் மேனன், ஆர்யா சலீம், செந்தில் கிருஷ்ணா, ஜெகதீஷ், சைஜு குரூப், திலீஷ் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இது தவிர மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு.

அது என்ன ஆப்ரஹாம் ஓஸ்லர், இந்த பெயரை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை இயக்குனர் மிதுன் கூறுகையில், ‘நவீன மருத்துவத்தின் தந்தை’ என கருதப்படும் கனேடிய மருத்துவர் ‘வில்லியம் ஓஸ்லர்’ நினைவாக பெயரிடப்பட்டது. இப்படத்தில் ஆபிரகாம் ஓஸ்லரின் தந்தை மருத்துவராகவும், இளம்வயது ஆபிரகாம் வளரும் போது அவரும் மருத்துவராவார் என்ற நம்பிக்கையில் அவரது தந்தை தனக்கு பிடித்த மருத்துவரான ஓஸ்லரின் பெயரை வைத்ததாக ஒரு பின்னணி கதையை கூறியிருக்கிறோம் என்று கூறினார்.

இப்படத்தின் கதைக்களம், ஒரு மூத்தக் காவலருக்கு தொடர் கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவர் கொலையாளியை கண்டுபிடிக்கும் பயணத்தை விறுவிறுப்புடன் கூறியிருப்பார் இயக்குனர். 10 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 40 கோடி வசூலித்தது. மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீப காலமாக மலையாள படங்களான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ மற்றும் ”ப்ரேமலு’ போன்ற படங்கள் பல மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. வருகிற மார்ச் 20 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மலையாளப் படங்களுக்கு அதிக மவுசு இருப்பதால் இந்த படத்தைப் பார்ப்பதற்கும் தமிழ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 

 

 

Published by
Meena

Recent Posts