ஆன்மீகம்

மாணிக்கவாசகரின் தோழி யார்? கிருஷ்ணரிடம் ஆண்டாள் நாச்சியார் கேட்டது என்ன தெரியுமா?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்த வகையில் இறைவனை வணங்கி வருகின்றனர். மாதம் மும்மாரி மழை பொழியணும்னு ஒரு சிலர் தான் வேண்டுறாங்க. மற்றபடி எல்லோரும் அவரவர் கஷ்டங்கள் தீரவே இறைவனிடம் முறையிடுகின்றனர். இது தவறல்ல.

என்றாலும் பொதுநோக்குடனும் இறைவனை வேண்டினால் தான் இயற்கையாய் உள்ள அந்த இறையருள் நம்மை வந்து சேரும். இந்த இனிய நாளான மார்கழி 4ம் நாளில் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய பாடல் இது.

Markali 4

2 தோழிகள் பேசுவது போல பாடல் ஆரம்பிக்கிறது. இன்னமுமா உனக்குப் பொழுது விடியல…சீக்கிரம் எழுந்திரு என தோழி எழுப்புகிறாள். எல்லாரும் வந்துட்டாங்களான்னு கேட்குறாள். எல்லாரும் வந்தாச்சு. இறைவனடி தொழுவதற்கு நீ வரலாம். யார் வந்தால் என்ன?

உனக்கு இறைவனருள் வேண்டுமானால் வா என தோழி அழைக்கிறாள். தோழி தோழி என்று பாடலில் பாடி மாணிக்கவாசகர் ஒவ்வொருவரது ஆன்மாவையும் தட்டி எழுப்புகிறார். அப்படியாவது இறைவனை வந்து சேருங்கள் என்கிறார்.

இன்னொருவருடன் உனது பக்தியை ஒப்பிடாதே. நாமே போய் நாமே அவரை வணங்கி நமக்குத் தெரிந்த வரையில் பூஜை செய்வோம். நமக்குக் கிடைத்ததை வைத்துக் கும்பிடுவோம். யார் யாருக்கு எதைத் தந்து இறைவனை வணங்க முடியுமோ அதையே தந்தால் போதும். இறைவன் அதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.

இறைவன் கண்ணுக்கினியவன். அவனைப் பாடி உள்ளம் கசிந்து அவரோடே இணைந்து இருப்பது தான் பக்தி. அதைச் செய்தாலே போதும் தோழி. நம்மை எல்லாம் இறைவன் ஒரு ஆன்மாவாக இருந்து காப்பாற்றுகிறார். நாம் எல்லோரும் அவருக்கு ஒரு தோழியாக இருப்போம் என மாணிக்கவாசகர் சொல்கிறார்.

ஆண்டாள் ஆழிமழைக்கண்ணா என பாடலை ஆரம்பிக்கிறார்.

Thiruvembavai 4

இன்றைய பாடலிலும் மழையின் தொடர்ச்சியைத் தான் பாடியுள்ளார். மழையைப் பற்றி அவர் குறிப்பிடுகையில் நீ ஒன்றையும் கையில் வச்சிக்காதே. தாராளமான வள்ளல் தன்மையுடன் எங்களுக்கு எல்லாத்தையும் கொடுத்து விடு என்கிறார்.

கர்ணன் என்றாலே கொடை வள்ளல் என்பது நமக்குத் தெரியும். அவரோட கொடைத்தன்மை எப்படிப்பட்டது என்பதை கிருஷ்ணர் நமக்கு உணர்த்துவதற்காக கர்ணனின் மரணதருவாயில் அந்தணர் வேடத்தில் வந்து யாசகம் கேட்கிறார்.

Karnan

ரத்தம் வழிந்து கொண்டு இருக்கும் போதும் கர்ணன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். இப்போது என்னால் என்ன தர முடியுமோ அதை மட்டும் தயவு செய்து கேளுங்கஎன்கிறார் கர்ணன்.

மரண தருவாயிலும் கூட கொடுக்கணும்னு நினைச்சார் அது தான் கர்ணன். ஆனால் யாரும் கேட்காத புண்ணியத்தை எனக்குத் தா எனக் கேட்டார். அதனால் தான் கிருஷ்ண பரமாத்மா புண்ணியத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து அவருக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தந்தார்.

அந்த வள்ளல் தன்மையையே நமக்கு அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணர். அதனால் தான் ஆண்டாள் நாச்சியார் வள்ளல் தன்மை கொண்ட கிருஷ்ணரிடம் எங்களுக்கு மழையைக் கொடு. நாங்கள் அதை வைத்து எல்லா வளத்தையும் பெற்றுக் கொள்கிறோம் என யாசகம் செய்கிறார்.

 

 

Published by
Sankar

Recent Posts