விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பயணம் குறித்து ஒரு பார்வை!

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஒரு காலத்தில் வாரிசு நடிகர் என்று அனைவராலும் ஓரம் கட்டப்பட்ட விஜய் இன்று தமிழக மக்களால் அன்புடன் தளபதி என்று அழைக்கும் அளவிற்கு மாறிய வளர்ச்சி பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

பொதுவாக சினிமாவில் வாரிசு நடிகர்கள் மீதான விமர்சனங்களை தவிர்க்க முடியாது. இந்த விமர்சனங்களை தளபதி எப்படி சமாளித்து வெற்றி பெற்றார் என்பதை அறிய நாம் 1990 காலக் கட்டிடத்திற்கு தான் செல்ல வேண்டும்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரால் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக விஜய் அறிமுகம் ஆனார்.

தொடக்கத்தில் தனது தோற்றத்திற்காக கடும் விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டார். ஆனால் அன்று யாரெல்லாம் விஜயை கேலி செய்தார்களோ அவர்கள் தான் இன்று விஜய் அழகின் ரகசியத்தை கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாளைய தீர்ப்பு படத்திற்கு பின்னர் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, குஷி, வசீகரா என சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக உருவெடுத்தார். அதன் பிறகு திருமலை, கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என ஆக்சன் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இதை அடுத்து விஜய்யின் திரை வாழ்க்கையில் பெரும் சறுக்கள் ஏற்பட்டது. அழகிய தமிழ் மகன், வில்லு, குருவி, சுறா என அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றி அடைய முடியாமல் போனது. ஒரே மாதிரியான கதைகள், ஒரே மாதிரியான நடிப்பு என விஜய் மீது விமர்சனங்கள் பரவ தொடங்கின. ஆனால் அதையெல்லாம் தூக்கி எறிந்த அவர் துப்பாக்கி, தலைவா, கத்தி என அசத்தலான படங்கள் கொடுத்து தமிழ் திரை உலகை தாண்டி தென்னிந்திய சினிமாவையே கதி கலங்க வைத்தார்.

பின்னர் தெறி, மெர்சல், பிகில் மூலமாக தன்னுடைய மாஸ் இடத்தை தக்கவைத்து கொண்டார். அதை தொடர்ந்து சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு போன்ற படங்களால் தன்னோட ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை கொடுத்தார். இருந்தாலும் தளபதி ரசிகர்கள் தங்களுடைய வெறித்தனமான ஆதரவை தொடர்ந்து விஜய்க்கு கொடுத்து வருகின்றனர்.

இதற்கு நடுவில் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஆழமான அரசியல் கருத்துக்கள் கரை வேட்டிகளை சற்று பதறவைத்தது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு, ஸ்டெர்லைட் போராட்டம், அனிதா மரணம் என அரசியல் ரீதியான செயல்களில் ஆழம் பார்த்த விஜய் அதன் பிறகு தனது மக்கள் இயக்கம் மூலம் தீவிர மக்கள் சேவையில் இறங்கினார். இதற்கு அண்மையில் அவர் தலைமையில் நடைபெற்ற கல்வி விழா மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

விஜய்யின் துப்பாக்கி, சர்கார் படங்களை தொடர்ந்து லியோ படத்திற்கும் எச்சரிக்கை கொடுத்த பசுமை தாயகம்!

விஜய்யின் இது போன்ற நடவடிக்கைகள் அரசியல் வருகையை எதிரொலிப்பதாக பலரும் கருத்து கூறி வரும் நிலையில் விஜய் தனக்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதை அவரது ரசிகர்களின் போஸ்டர்கள் எடுத்துரைக்கின்றன.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க தனது கடினமான நேரங்களை தனக்கே உரித்தான அழகான சிரிப்பு மூலம் எளிதாக கடந்து இன்றும் இளம் வயதினருக்கு பாசிட்டிவிட்டியை கடத்தி வரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...