அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் இணைந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் அவ்வப்போது கண்ணை மறைக்கும் விதமாக சில கொடூர செயல்கள் அரங்கேறி உயிரைக் குடிக்கின்றன. அவ்வாறு நேற்று கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய அந்த சோக நிகழ்வு இந்தியாவையே உலுக்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டை மேடு என்னும் ஊர் அருகே கர்ணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்தி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அது அப்போது கள்ளச்சாராய நிகழ்வு என யாரும் கணிக்கவில்லை. முதல்பலி ஏற்பட்ட போது பதற்றம் தொற்றியது. நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து பலர் விஷச் சாராயத்தின் வீரியம் தாங்க முடியாமல் பரிதாபமாக தங்கள் உயிரை இழக்க தமிழகமே பரபரப்பானது.

அரசும் உடனே துரித நடவடிக்கையை எடுத்து களத்தில் காவல் துறையும், மதுவிலக்கு அமலாக்கத்துறையும், மருத்துவத்துறையும் இறங்க தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது.தொடர்ந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக மாற உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போதும் விடாத எமன் துரத்தி துரத்தி சிலரது உயிரைக் குடிக்க சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதனால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்படவே இன்று அவசர ஆலோசனை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்னும் கன்னுக்குட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

பளபளன்னு வந்த பார்சல்.. ஆசையாய் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே பதுங்கியிருந்த விஷ ஜந்து..

இந்தச் சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ரஜத் சதுர்வேதி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணி நேரில் சந்தித்தார். உடன் அமைச்சர் எ.வ.வேலுவும் சந்தித்தார்.

மேலும் இச்சம்பவத்தால் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் அதிக அளவு மெத்தனால் கலக்கப்பட்டதே அடுத்தடுத்து உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பதை வெறும் வாக்கியமாகத்தான் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உணர்ந்தபாடில்லை.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...