சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்

சென்னை : உலகெங்கும் கண்ணாடிப் பாலங்கள் நடக்கும் சுற்றுலாத் தலங்கள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் பீகாரின் ராஜ்கிர், கேரளாவின் வயநாடு, வாகமன், சிக்கிம் என சில இடங்களில் மட்டுமே இந்தக் கண்ணாடிப் பாலங்கள் உண்டு. இதில் நடந்து செல்வதே அலாதியான அனுபவம். கண்ணாடிப் பாலத்தில் கால் வைத்தாலே கிடுகிடுவென வடிவேலு பாணியில் நடுங்க வைக்கும்.

பயத்தையும் மீறி இருமலைகளுக்கு நடுவிலும், இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டும், பல 100 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடிப் பாலங்கள் கண்ணாடி நார் இழையால் செய்யப்பட்டவை. கட்டுமானப் பொறியியல் துறையின் மைல்கல்லாக விளங்கும் இந்தக் கண்ணாடிப் பாலங்கள் இயற்கைச் சீற்றங்கள் வெப்பம், குளிர், மழை என அனைத்தையும் தாங்கும் சக்தி படைத்தது.

இத்தகைய கண்ணாடிப் பால சுற்றுலா இப்போது தமிழகத்திற்கும் வந்துவிட்டது. ஆம். தலைநகர் சென்னையில் தான் இந்த கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடிப் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நோக்கில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி தொங்கு பாலம் 41 அடி உயரம் கொண்டது. மேலும் ஏரியைச் சுற்றி படகு சவாரி, உணவகங்கள், 2டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, இசை நீரூற்று போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வருகிற தீபாவளி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி முதல் முழுதாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னைக்கு புதிய சுற்றுலா அடையாளமாக விளங்கப் போகும் கண்ணாடி தொங்கு பாலத்தில் தங்களது பாதங்களைப் பதிக்க சென்னை வாசிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews