20 லட்சம் கோடி- ஏழைகளுக்கு ஒன்றுமே இல்லை- ப .சிதம்பரம்

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இரண்டு மாதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் , பலர் வேலை இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு போதிய தொகையை மத்திய மாநில அரசுகள் இதுவரை கொடுக்கவில்லை என்ற பேச்சு நிலவி வரும் நிலையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடி பேசிய பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது. அதில் 20 லட்சம் கோடி பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


இந்நிலையில் 20 லட்சம் கோடிக்கான சில திட்டங்களை விவரங்களை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் நேற்று செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார். இதில் பல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பணம் சென்று சேராத வகையில் உள்ள திட்டங்களாக உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நிதி சம்பந்தப்பட்ட நிறைய விசயங்களில் தளர்வும், கால அவகாசமும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. பல தொழில்களுக்கு கடன் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பலருக்கு பண உதவியோ, பொருளுதவியோ செய்யும் அளவிலான திட்டங்கள் எதுவும் இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

இதையே முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமும் கூறி இருக்கிறார். மத்திய அரசு அதிகமாக செலவிட வேண்டும். ஆனால், அதையும் மத்திய அரசு செய்யத் தயாரில்லை. அதிகமாக கடன் வாங்க வேண்டும், அதையும் செய்ய மத்திய அரசு தயாரில்லை. மாநிலங்களை அதிகமாக கடன் பெற அனுமதிக்க வேண்டும், அதையும் செய்யத் தயாரில்லை.

மத்திய அரசு ரூ.3.6 லட்சம் கோடிக்குப் பிணையில்லாத கடனை சிறு தொழில்களுக்கும், வர்த்தகத்துக்கும் அறிவித்துள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே?

அனைத்தும் ஏமாற்றம் அளிக்கிறது. நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கும்,ஏழைகளுக்கும் இந்த அறிவிப்புகளில் ஒன்றுமில்லை. இந்த அறிவிப்புகளால் தேவை, நுகர்வு தூண்டப்படும் என்பதில் எனக்குத் தெரியவில்லை என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts