கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!

தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தது போல சில நட்சத்திரங்கள் மின்மினியாக தோன்றி ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஔிர்ந்து கொண்டிருக்கும். அது போன்ற நட்சத்திரம் தான் இவர். ரஜினி, கமல் தலையெடுக்க துவங்கிய அவர்களுக்கு ஆரம்ப கால போட்டியாளர் இவர். 1980களின் தமிழ் ரசிகைகளுக்கு கமலுக்கு முந்தைய காதல் இளவரசனாகத் திகழ்ந்தவர்தான் சுதாகர்.

சுதாகரின் பூர்வீகம் ஆந்திரா. இந்த சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த சுதாகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாஸ்மெட் ஆவார். அன்று தொடங்கிய இவர்களது நட்பு தற்போது வரை தொடர்கிறது.

தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகள் இவரது ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. அதற்குள் சுமார் 30 படங்களை நடித்தார். 1980ல் மட்டும் நாயகனாக இவரது 7 படங்கள் வெளியாகின. சுதாகரை 1978ல் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

’16 வயதினிலே’ படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தான் சுதாகர் அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவும் அறிமுகம். அதன் பிறகு இந்த ஜோடி மட்டும் 11 படங்களில் நடித்திருக்கிறார்கள்.

Sudhakar

சுருட்டை முடி , களையான முகம், வித்தியாசமான தலை வகிடு, சின்ன மூக்கு, வசீகரமான தோற்றம் என மனதை கவர்ந்த சுதாகருக்கு ரசிகர் ரசிகைகள் கூட்டம் அதிகம் உண்டு. பாக்யராஜ் படமான ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தில் சுதாகர் தான் ஹீரோ என்றால் பாருங்கள்.

இயக்குநர் பாரதிராஜா, ஹீரோ போல பிரதான வேடத்தில் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் சுதாகரும் ஒரு ஹீரோ. கமலுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்திலும் ரஜினியுடன் ‘அதிசயப் பிறவி’ படத்திலும் நடித்திருக்கிறார்.

அறிமுகமான ஒரு சில ஆண்டுக்குள்ளேயே, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘எங்க ஊரு ராசாத்தி’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘கரும்பு வில்’, ‘கரை கடந்த ஒருத்தி’, ‘தைப்பொங்கல்’ என 80ஸ் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதாகரின் படங்கள் ஏராளம்.

இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி மிஸ் பண்ணாங்க…? உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

மினிமம் பட்ஜெட்டில் ஏராளமான வெற்றிப் படங்கள், ரசிகர், ரசிகைகள் பட்டாளம்… என 1980களில் ரஜினி, கமலுக்கு இணையாக, சுதாகரும் ‘உதிரிப் பூக்கள்’ விஜயனும் செம டஃப் கொடுத்தனர்.சினிமாவில் நல்ல உச்சத்தில் இருக்கும் சமயத்தில் சுதாகரின் போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

தமிழில் உச்சத்தில் இருந்தபோதே தெலுங்கிலும் வெற்றிக் கொடி நாட்டி பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். பின்னர் 1990களின் துவக்கத்தில் தெலுங்கில் காமெடியனாக அரிதாரம் பூசினார். அவரது குரலும் மிமிக்ரி திறமையும் அதற்கு கை கொடுத்தது. அதன்பிறகு அவருக்கு ஏற்ற நகைச்சுவை வேடங்களைத் தேர்ந்தெடுத்து நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் தான் ரஜினியின் ‘அதிசயப் பிறவி’ படத்தில் சுதாகர் நடித்தார்.  பின் ஹாலிவுட் சூப்பர் ஹிட் ‘பேபிஸ் டே அவுட்’ படத்தின் ரீமேக்கான ‘சுட்டிக் குழந்தை’ படத்தில் குழந்தையை கடத்தும் காமெடி வில்லன்களில் சுதாகரும் ஒருவர். அதில் அவரது குரல் மாடுலேஷன், தோற்றத்தை பார்த்தால் 1980ஸ் சுதாகரா இவர் என்ற கேள்வி நிச்சயமாக எழும்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு தமிழ், தெலுங்கு சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த சுதாகர், போதையால் புகழை இழந்து, காமெடியனாக மாறி சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார். போதை வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் என்பதற்கு இவரும் ஓர் உதாரணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews