பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் வாய்ப்புக் கேட்கப் போன இடத்தில் ஏற்பட்ட அவமானம்.. பிரபல எழுத்தாளர் செய்த வேலை

தேனி மண்ணின் மைந்தர்களான இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். ஆனால் அதற்கு முன் இளையராஜா தேனி, மதுரைப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து தனது சகோதரர்களுடன் மேடைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். பாரதிராஜாவோ சென்னை வந்து சினிமா வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரும் ஒரு பிரபல எழுத்தாளரை வாய்ப்பிற்காகச் சந்திக்க நேரிட்டது. அப்போது அவர் முகத்தில் அறைந்தாற் போல பேசி அவர்களை அனுப்பியுள்ளார். இந்த அவமானம் அவர்களுக்கு உத்வேகம் தர தொடர்ந்து முயற்சி செய்து பின் சினிமாவில் இருவரும் சாதித்துள்ளனர். அவர்களை அவ்வாறு பேசியவர் இலக்கிய உலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தான்.

ஒருமுறை இளையராஜாவும், பாரதிராஜாவும் அவரைப் பார்க்க சென்றபோது சீற்றத்துடன் அமர்ந்திருந்தார் ஜெயகாந்தன். இது நடந்தது அவர்கள் இருவரும் சென்னைக்கு வந்த புதிதில். அது ரொம்ப சிரமமான காலம். சினிமா வாய்ப்புகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

என்ன செய்யலாம் ? யாரைப் போய் பார்க்கலாம் ? ஜெயகாந்தன் அப்போது சினிமாவில் எழுதிக் கொண்டிருந்தார். ஏற்கனவே இளையராஜாவிற்கு ஜெயகாந்தனை தெரியும். கம்யூனிஸ்ட் காலத்திலிருந்தே பழக்கம். அவரைப் போய் பார்த்தால் சினிமா வாய்ப்புகள் ஏதாவது கிடைக்கலாம் என்பது இளையராஜாவின் எண்ணம்.

ஓரே படத்தில் ஓஹோவென ஹிட் கொடுத்த இயக்குநர்.. குடியால் விஜய் படத்தை தவற விட்ட பரிதாபம்

பாரதிராஜாவை துணைக்கு அழைத்தார். கூடவே இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரும் சேர்ந்து கொண்டார். மூன்று பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெயகாந்தன் வீட்டுக்கு போனார்கள். ‘வாங்க தோழர்’ என்றார் ஜெயகாந்தன். உட்காரச் சொன்னார்.

“என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் தோழர் ?”

இளையராஜா கொஞ்சம் தயக்கத்துடன், “ஊரை விட்டு வந்து விட்டோம். சினிமாவில் முயற்சி பண்ணலாம் என்று நினைக்கிறோம். உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்தோம் தோழரே!”

இளையராஜா இப்படிச் சொன்னவுடன் சற்று நேரம் அமைதியாக இருந்தார் ஜெயகாந்தன். திடீரெனக் குரலை உயர்த்தி சினம் கொண்டு சீறினார்: “என்னை நம்பி வந்தீர்களா? என்னை கேட்காமல், என் அனுமதி இல்லாமல் என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? உங்களை நம்பித்தானே நீங்கள் வந்திருக்க வேண்டும்?”

கோபத்துடன் இப்படிச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டார் ஜெயகாந்தன். இறுக்கமான சூழ்நிலை. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மூன்று பேரும் சத்தம் போடாமல் எழுந்து வெளியே வந்து விட்டார்கள். ஜெயகாந்தன் வீட்டுக்கு வெளியே வந்தபின்… விழுந்து விழுந்து சிரித்தார்.

பாரதிராஜா  “என்னய்யா இது, கம்யூனிஸ்ட்… தோழர்… அது இதுன்னு மேடையில மட்டும் பேசறாரு இந்த ஜெயகாந்தன். ஆனா வீடு தேடி வந்த நண்பர்கள்கிட்ட ஆறுதலா ஒரு வார்த்தை கூட பேசலையே..!” என்று கேட்க, அதற்கு இளையராஜா, “இல்லை பாரதி. ஆத்திரத்தோட பேசினாலும் அவர் சொன்னதுல நியாயம் இருக்கு.” பாரதிராஜா இளையராஜாவை திரும்பிப் பார்த்தார். “ஆமாம் பாரதி, ‘உங்களை நீங்க நம்புங்க..!’ வீடு தேடிப் போன நமக்கு, ஜெயகாந்தன் கொடுத்த விஷயம் இதுதான். இன்றிலிருந்து ஒண்ணு பண்ணுவோம். நம்மை நம்புவோம். முழுமையா நம்புவோம்.” இளையராஜா இப்படிச் சொன்னதை பாரதிராஜாவும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்.

நாட்கள் செல்லச் செல்ல முயற்சியின் விளைவாக இசையின் ஜீவனாக மாறினார் இளையராஜா, இயக்குநர் இமயமாக மாறினார் பாரதிராஜா. அதன்பின் கம்யூனிஸ்ட் தோழர் இளையராஜா, கொஞ்சம் கொஞ்சமாக கடவுளின் தோழர் ஆக மாறிப் போனார். கம்யூனிஸ்ட் தோழராக இருந்தாலும் சரி. கடவுளின் தோழனாக இருந்தாலும் சரி. இருவருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால் நம்மை நம்புவோம். முயற்சி திருவினையாக்கும் என்பது தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews