வியர்வை நாற்றம் வீசாமலிருக்கனுமா?!


f25e1ab8293d9b5fff9a79294bf6b3b9

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இனி வேர்த்து ஊத்தும். வியர்வை பிசுப்பிசுப்பைக்கூட தாங்கிக்கலாம். ஆனா, இந்த வியர்வை நாற்றம்?! வியர்வை நாற்றம் நம்மை மட்டுமில்லாம, நம்மை சுற்றி உள்ளோரையும் முகம் சுளிக்க வைக்கும். தினத்துக்கு இருமுறை குளிக்கனும். பருத்தி உடை அணியனும். ஆனாலும் வியர்வை நாற்றம் சிலருக்கு அதிகமா இருக்கும். அவங்களுக்குலாம் வியர்வை நாற்றம் வராம இருக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்…

பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, நேச்சுரல் டியோடரண்டு போன்று செயல்படும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அக்குளில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற, நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பாக்டீரியாக்களின் வளர்ச்சியை எதிர்க்கும். இது சருமத்தின் pH அளவை நிலையாக பராமரித்து, உடல் துர்நாற்றத்தைப் போக்க உதவும். ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சுருண்டையில் நனைத்து, அக்குளில் தடவி 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை காலை மற்றும் இரவு படுக்கும்முன் செய்து வந்தால், வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

ரோஸ் வாட்டர் அக்குள் நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவுங்கள். இல்லாவிட்டால், குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து குளியுங்கள். இதனால் நாள் முழுவதும் உடல் ஒரு நல்ல மணத்துடன் இருக்கும்.

தக்காளி கூழ் தக்காளியில் உள்ள அசிடிட்டி, துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் சருமத்துளைகளை சுருங்கச் செய்யும். இதனால் இது உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தைக் குறைக்க உதவும். அதற்கு தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வந்தால், ஒரு நல்ல பலனைப் பெறுவதோடு அக்குள் கருமையும் மறையும்.

எலுமிச்சை பழங்காலம் முதலாக உடல் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தினமும் குளிக்கும்முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்க்க வேண்டும். நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். அல்லது குளிக்கும் நீரில் எலுமிச்சையை சாறு பிழிந்து குளிக்கலாம்.

சந்தன பவுடர் நல்ல நறுமணத்தை கொண்டது. முக்கியமாக சந்தனம் அக்குளில் இருந்து வீசும் துர்நாற்றத்தை நீக்கும். அதற்கு சந்தன பவுடரை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் அக்குள் பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் போவதோடு, அக்குளில் உள்ள கருமையும் அகலும்.

வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும். டீ ட்ரீ அல்லது லேவண்டர் – இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் சந்தையில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. மிக முக்கியமான விசேச நாட்களில் வியர்வை தடம் தெரியாமல் இருக்க பயன்படுத்தலாம். அடிக்கடி உபயோகிக்க கூடாது.

உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் இதற்கு காரணமாகலாம். பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

இப்படி செய்தால் வியர்த்து வழிந்தாலும் நாற்றமடிக்காது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment